சனி, 10 மே, 2014

தனியார் காணியில் தென்பகுதிவாசி அடாவடி; பிரச்சினை நீதிமன்றுக்குப் பாரப்படுத்தப்பட்டது!!

மன்னார், கூராய் பிரதேசத்தில் தனியார் காணியைத் தென்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அரசியல் செல்வாக்குடன் மணல் வியாபாரத்துக்கு பயன்படுத்திவருவதற்கு அப்பகுதிமக்கள் திரண்டு எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர். குருணாகலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பலவந்தமாகக் காணியை அபகரித்து அதனூடாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கூராய் கிராமத்தில் ம.சண்முகராசா, சி.புவனேஸ்வரன் ஆகியோரது வயல் காணிகளையே தென்பகுதியை சேர்ந்தவர், அரசியல் வாதிகளின் செல்வாக்கைப் பயன்படுத்தி அபகரித்துள்ளார் என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இதுகுறித்து காணிஉரிமையாளர் அண்மையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் முறையிட்டபோது, காணியைச் சுற்றிவேலி போடும்படி அவர் உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று மாலை தனது காணிக்கு வேலி அடைத்துள்ளார் உரிமையாளர். இதனைக் கேள்வியுற்ற தென்னிலங்கை வாசி, தனது ஆதரவாளர்களுடன் வந்து வேலியைப் பிரித்து காணிக்குள் தனது வாகனத்தைச் செலுத்தி வேலி அடைக்கவிடாமல் கலவரம் செய்துள்ளார். இதுகுறித்து காணி உரிமையாளர் இலுப்பக்கடவை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். அங்குவந்த பொலிஸார், இரண்டு பேரையும் காணிக்குள் செல்லக்கூடாது என்று பணித்ததுடன், எதிர்வரும் திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதனூடாகத் தீர்வுகாணுமாறும் பணித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக