திங்கள், 12 மே, 2014

ஜெரோமி கொன்சலிற்றா வழக்கு; பாதிரியார்கள் மன்றில் சாட்சியம்!!!

குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கில் சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இரண்டு பாதிரிமாரும் மன்றில் முன்னிலையாகிச் சாட்சியமளித்தனர். ''எமக்கும் உயிரிழந்த யுவதிக்கும் தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மறைக்கல்வி ஆசிரியராக இருந்ததன் காரணமாக அது தொடர்பான தொடர்பே இருந்தது. இதுதவிர இந்தப் பெண்ணுடன் தொலைபேசியில்
தொடர்புகொள்ளவுமில்லை. குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) அனுப்பவுமில்லை''- என்று மன்றில் சாட்சியமளித்தனர் இரண்டு பாதிரியார்களும். வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் 6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். பாலியல் ரீதியாக பாதிரியார்கள் இருவரும் தொந்தரவு கொடுத்ததன் காரணமாகவே தமது மகள் தற்கொலை செய்துகொண்டார் என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மன்றில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாதிரியார்கள் சார்பாகச் சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம், மு.றெமீடியஸ் ஆகியோர் முன்னிலையாகி வாதிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன இந்த யுவதி மறுநாள் கிணற்றிலிருந்து சடலமா க மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக