செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எம்.பிக்களுக்கு அக்கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட இடமளிக்கப்படவில்லை -செல்வி தங்கேஸ்வரி

ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அக்கட்சியின் வேட்பாளர்களாகப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி கதிராமன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ் தேசியத்திற்காகக் குரல் கொடுத்தவர்களுக்கே பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பட்டியலில் இடமளித்திருப்பதாக முன்னாள் எம்.பியான இரா.சம்பந்தன் கூறியுள்ளார். ஆனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தமிழ் தேசியத்திற்காகப் பேசிய எமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்றும் தங்கேஸ்வரி கூறியுள்ளார். தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக கடந்த 5 வருட காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திகளுக்குத் தம்மால் பங்களிப்பு செய்ய முடியாமல் போனது. இதனையிட்டு பெரிதும் கவலை அடைகிறேன் எனவும் தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார். மக்களோடு, மக்களாக வாழும் எமக்கு த.தே.கூ.அபேட்சகர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லை. ஆனால் பிரதேசத்தில் மக்கள் ஆதரவற்றவர்களுக்கு இடமளிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு எடுத்தது. இம்முடிவை கட்சிக் கூட்டத்தில் நாம் எதிர்த்தோம். அம்முடிவுக்கு ஆதரவாக நாம் செயற்படவுமில்லை. இம்முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டியலில் இடமளிக்கப்படவில்லை என அறிகின்றேன். இருந்தபோதிலும் மக்கள் எம்முடன் இருக்கின்றார்கள். எமது மக்களுக்கு நிறையத் தேவைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றி வைப்பது எமது பொறுப்பு. அதனால் மக்களின் விருப்பத்தோடு இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன் என்றும் தங்கேஸ்வரி மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக