வியாழன், 17 டிசம்பர், 2009

சம்பந்தன் நாடு திரும்பியதும் இறுதி முடிவுகுறித்து அறிவிக்கப்படும் -த.தே.கூ. அறிவிப்பு!

தற்போது வெளிநாடு சென்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை திரும்பியதும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் வெளியிடப்படும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தமி;ழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பிரச்சார செயலணியின் முகாமையாளருமான பஷில் ராஜபக்ஷவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துள்ளது. இதன்போது நான்கு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதற்கு அரசாங்கத்தின் சார்பில் திருப்திகரமான பதில் எவையும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எதிர்வரும் தினங்களில் வீயன்னாவில் இருந்து சம்பந்தன் திரும்பியதும் இதுதொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெரும்பாலும் எதிர்கட்சி பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கும் சாத்தியப்பாடுகள் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் மனப்போக்கு சரத்பொன்சேகாவிற்கு சாதகமாக மாறிவருகின்றமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இந்த வாரத்தின் இறுதியில் அல்லது அடுத்தவார முற்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இறுதி நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக