புதன், 16 டிசம்பர், 2009

காங்கேசன் துறைமுகம் 10 கோடி ரூபா செலவில் புனர்நிர்மாணம் !

காங்கேசன்துறை துறைமுகத்தைப் பத்துக் கோடி ரூபா செலவில் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன. நாட்டின் கடற் போக்குவரத்துக்களைச் சீரமைக்கும் திட்டத்தில் காங்கேசன்துறைமுக அபிவிருத்தியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகப் புனரமைப்பு வேலைகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் என்று தகவல் ஒன்று கூறுகின்றது.
இது வரை காலமும் காங்கேசன்துறை துறைமுகம் பெரும்பாலும் இராணுவப் பணிகளுக்கே பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் அமைதி நிலை கொண்டு வருவதால் துறைமுகத்தைப் பொதுவான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புனரமைப்பு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், இறங்குதுறைகள் நவீனப்படுத்தப்படும் என்றும் துறைமுகப்படுகை ஆழப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. துறைமுகத்துக்கான பாதைகளும் புனரமைக்கப்படவிருப்பதோடு காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களும் உருவாக்கப் பட்டு வருவதாகத் தெரியவருகின்றது.
நாட்டின் நவீன வர்த்தகத்துறை முகங்களில் ஒன்றாக காங்கேசன் துறைமுகம் விரைவில் செயற்பட விருப்பதாக துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகம் பிரயாணிகளையும், சரக்கு களையும் ஏற்றிஇறக்கும் பிரதான துறைமுகங்களில் ஒன்றாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் வடக்கில் விளையும் பொருள்களைச் சுலபமாக ஏனைய துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லும் வசதிகளைக் கொண்ட துறைமுகமாகவும் இது அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக