திங்கள், 19 ஜனவரி, 2015

கிழக்கு முதலமைச்சர் விவகாரம் ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு இன்று பேச்சு..!!!

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட புதிய ஆட்சி அமைப்பு விவகாரம் தொடர்பாக இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்தார்.
த. தே. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் செயலாளர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட உயர்பீடத் தலைவர்கள் இன்றைய தினம் கொழும்பில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமது நிலைப்பாடு தொடர்பில் எடுத்துரைக்கவுள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


கிழக்கில் தமிழ் மக்கள் சார்பாக 11 உறுப்பினர்கள் மாகாண சபையில் உள்ளனர். இருந்தும் கடந்த கலங்களில் இந்த சபை தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும் பொடுபோக்குத்தனமாக நடந்துகொண்டமை வேதனைக்குரியது.

தமிழ் மக்களின் அபிவிருத்தியிலும் நியமனத்திலும் இடமாற்றத்திலும் கிழக்கில் பாரிய புறக்கணிப்புகள் நடந்தேறின. கிழக்கில் குரல் கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இம்முறையும் அதேபோன்றதொரு தவறைச் செய்ய நாம் விரும்பவில்லை. எனவே ஜனாதிபதி பிரதமரிடம் இது பற்றிக் கூறி தார்மீகக் கடமையைச் செய்யுமாறு வேண்டவுள்ளோம்.

சிலவேளை அரைவாசிக் காலத்திற்கு எம்மையும் மீதிக் காலத்திற்கு மு. கா.வும் முதலமைச்சர் பதவியை வகிக்குமாறு கோரப்படுமாயின் எமக்கே முதல் காலப் பகுதி வழங்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாகவிருக்கின்றோம்.

நாம் வெறுமனே பதவிக்காகவும் சுகபோகத்திற்காகவும் சண்டை பிடிப்பவர்களல்ல. பதவிகளுக்காக நாம் ஆசைப்பட்டவர்களல்ல. மத்திய அரசில் கிடைத்த அமைச்சைக்கூட நாம் ஏற்கவில்லை.

நாம் சீரிய கொள்கையுடையவர்கள். எமது மக்களின் உணர்வலைகளோடு சமாந்தரமாக பயணிக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் எமக்குண்டு. அதனை கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படையாக அமோக ஆதரவைத் தெரிவித்துக் காட்டியுள்ளனர்.

எனவே எமக்கு சாதகமான முடிவு கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக