செவ்வாய், 11 நவம்பர், 2014

தலைமைத்துவப் பயிற்சி ஏழு அடி சுவரிலிருந்து குதித்த மாணவி வைத்தியசாலையில்..!!

தலைமைத்துவப் பயிற்சியின் போது பல்கலைக்கழக மாணவியொருவர் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலயில் சிகிச்சை பெற்று வருவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வி.கே.டி.ஆர். கௌசல்யா என்ற மாணவியே படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கலத்தேவ இராணுவ முகாமில் சுவர் அளவிடும் பயிற்சி இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி 7 அடி உயரம் கொண்ட சுவரின் மேல் இருந்து கீழே குதித்தபோது உபாதைக்கு உள்ளாகியதாகவும் அவரது இடுப்புப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மாணவியின் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.



பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் பலாத்கார பயிற்சியில் கண்டி - கன்னொருவ இராணுவ முகாமில் மாணவி ஒருவர் இராணுவ வீரரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இந்த சம்பவத்தை அரசாங்கம் மூடிமறைத்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள், பெற்றோர்கள், விரிவுரையாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசியல் தேவைக்காக அரசாங்கம் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்பயிற்சி மூலம் மாணவர்களின் உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைத்துவ பயிற்சி இரண்டு மாணவர்களின் உயிரை பலியெடுத்துள்ள நிலையில் பாலியல் வல்லுறவு, உபாதைக்கு உள்ளாதல், இராணுவ ஒற்றர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைத்தல் போன்றவை அரசாங்கத்தின் தேவைக்காகவே இடம்பெறுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜித் இந்திக்க குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக