ஞாயிறு, 3 அக்டோபர், 2010

நாட்டின் மத்திய, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பெய்துவரும் அடைமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு..!

நாட்டின் மத்திய, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பெய்துவரும் அடைமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளன. ஆறுகள் சில பெருக்கெடுத்ததால் தாழ்ந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் வீதிகள் மூடப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி வாரமஞ்சரிக்குத் தெரிவித்துள்ளார். மண்சரிவு காரணமாக நேற்றுக்காலை மரணமொன்று சம்பவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை, பத்கடுவ பகுதியில் வீடொன்று சரிந்து வீழ்ந்ததில் 52வயதான நபரொருவர் மரணமடைந்துள்ளதாக கொடிப்பிலி கூறியுள்ளார். குருநாகல் மாவட்டத்தின் மல்லவபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோரயாய ஓடை பெருக்கெடுத்ததால் 19 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 4 வீடுகளுக்குச் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கண்டி மாவட்டத்தில் கலகெதர பகுதியில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால், மூன்று குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொடிப்பிலி தெரிவித்துள்ளார். கண்டி, அக்குறண பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேசத்தில் கலவான ஊடான இரண்டு வீதிகள் மூடப்பட்டுள்ளன. குக்குலோகங்க நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்ததால் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை கொட்டபொல பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நில்வள கங்கை, களுகங்கை, களனிகங்கை, கின்ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக