வியாழன், 13 நவம்பர், 2014

இலங்கையின் இறுதிக்கட்ட போர் ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மறைத்துள்ளது இன்னர் சிற்றி பிரஸ்..!!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது நிகழ்ந்த போர் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை ஐ.நா சபை திட்டமிட்டு மூடிமறைத்துள்ளதாக ஐ.நா சபையின் உள்ளகத் தகவல்களை வெளியிடும் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இலங்கையில் இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியான 2009 ஜனவரி 20ம் திகதி முதல் 2009 மார்ச் 7ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2683 பொது மக்கள் கொல்லப்பட்டும் 7241 பேர் காயமடைந்தும் உள்ளதாக ஐ.நா தலைமையகத்திற்கு கிடைத்திருந்த புள்ளிவிபர தரவுகள் குறித்த இரகசிய தரவுகள் அடங்கிய அறிக்கையொன்று தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தே இன்னர் சிற்றி பிரஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பொது மக்களின் இழப்புக்கள் குறித்த தகவல்கள் அறிந்திருந்தும் திட்டமிட்ட முறையில் அந்த விபரங்களை மூடிமறைத்ததன் மூலம் ஐ.நா இலங்கை அரசை சர்வதேச நெருக்கடிகளில் இருந்தும்
விமர்சனங்களில் இருந்தும் காப்பாற்றுவதற்கு முயற்சித்துள்ளதாகவும் இன்னர் சிட்டி பிரஸ் குறிப்பிடுகின்றது.

இதனாலேயே பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் அது குறித்த எந்தத் தகவல்களும் தங்களுக்கு தெரியாது என்று ஐ.நா மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர்கள் உட்பட ஐ.நா சார்பில் பேசவல்ல அதிகாரிகள் அனைவரும் அந்தக் காலப் பகுதியில் கூறிவந்ததாகவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

குறிப்பாக 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மைக்கல் மொன்டாஸிடம், இலங்கையில் இடம்பெறும் போரில் பொது மக்களின் உயிரிழப்புக்கள் 1200க்கு அதிகமா அல்லது குறைவா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தாங்கள் பொது மக்களை பாதுகாக்கவே பாடுபடுகின்றோமே தவிர உயிரிழந்த சடலங்களை எண்ணிக்கொண்டிருக்கவில்லை என்று கூறி பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் ஐ.நா சபைக்கு வன்னியில் பொது மக்களுக்கு ஏற்பட்டிருந்த இழப்புக்கள் குறித்த குறைந்தபட்ச புள்ளிவிபரங்கள் அப்போது அறிக்கையாக ஐ.நா தலைமையகத்திற்கு கிடைத்துள்ளது.

அந்த சமகால தரவுகளுக்கமைய 2009 ஜனவரி 20ம் திகதி முதல் 2009 மார்ச் 7ம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2683 பொது மக்கள் கொல்லப்பட்டும், 7241 பேர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இதுபோன்ற மிகவும் மோசமான போர் குற்றங்கள் குறித்த தரவுகளை மூடிமறைத்ததால், இன்றைய தினம் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற போர் குற்றங்களை ஆவணப்படுத்தும் முக்கிய நிகழ்விலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து அக்கறை செலுத்தப்படாது புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை இலங்கை குறித்து விசாரணை நடத்திவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழு, இலங்கைக்கு விஜயம் செய்யாது இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையை தயாரிப்பது எவ்வாறு என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் போர் குற்றங்கள் குறித்த ஆவணப்படுத்தல் பேரவையிடம் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக