சனி, 8 நவம்பர், 2014

30 வருட பின்னடைவை சமப்படுத்தவே அதிகளவு நிதியில் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அம்பாந்தோட்டையில் ஜனாதிபதி..!!

30 வருட பின்னடைவை சமப்படுத்தும் நோக்கிலேயே ஏனைய மாகாணங்களை விட அதிகளவு நிதியை செலவிட்டு வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொண்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து துறைகளும் அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த இலக்கு மனித வள அபிவிருத்தியே என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கில் சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து 96 மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடங்களையும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரிவித்த ஜனாதிபதி, எத்தகைய அடிப்படை வசதிகளும் இல்லாத நெடுந்தீவுக்கு மின்சாரத்தையும், மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் பெற்றுக்கொடுத்தி ருப்பதாகத் தெரிவித்தார்.

காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலுமுள்ள கிராம சேவகர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு அம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ச சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அமைச்சர்கள் ஜீ.எல்.பீரிஸ், ஜோன் செனவிரட்ன, மஹிந்த அமரவீர உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

தென்மாகாணம் ஒரு காலத்தில் மிகவும் கவனிப்பாரற்றுக் கிடந்த மாகாணமாகும். வெள்ளைக்காரர்கள் காலத்தில் மாத்தறை வரை வந்த ரயில் அம்பாந்தோட்டைக்கு வரவில்லை. அதேபோல எம்மவர் ஆட்சிக் காலத்திலும் அம்பாந்தோட்டைவரை ரயில் சேவைகள் தொடரவில்லை. அத்தகைய பாரபட்சமான அபிவிருத்தியே நாட்டில் தொடர்ந்தது. முழு நாட்டினதும் அனைத்துத் துறைகளையும் அபிவிருத்தி செய்வதே எமது அரசங்கத்தின் நோக்கமாகும்.

ஏனைய பிரதேசங்களோடு சமப்படுத்தும் வகையிலேயே வடக்கு, கிழக்கில் அதிக அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளோம்.

“புபுதமு ஸ்ரீலங்கா” கொள்கைத் திட்டத்தின் கீழ் அரச துறையை சீர்குலைக்கும் பாரிய நடவடிக்கையை ஐ.தே.க அரசாங்கம் மேற்கொண்டது. அரச துறைமீது நம்பிக்கையில்லாது தனியார் துறையை முன்னேற்றும் நோக்கத்திலேயே அவர்கள் செயற்பட்டனர்.

நாம் அரச துறைமீது நம்பிக்கை வைத்துள்ளோம். அதனால்தான் அரசதுறை ஊழியர்களை 15 லட்சமாக அதிகரித்துள்ளோம். அவர்களது காலத்தில் அரசியலைப் பயன்படுத்தி 7ம் வகுப்பு படித்த வரையும் கிராம சேவகர்களாக நியமித்தனர்.

படித்த அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கும் வகையில் நாம் அவற்றில் மாற்றம் கொண்டுவந்தோம். க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்று திறந்த போட்டிப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை மூலமே நாம் கிராம சேவகர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக