வெள்ளி, 31 அக்டோபர், 2014

வடக்கு செல்லும் வெளிநாட்டவர் தொலை நகல் மற்றும் மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் அரசாங்கம்..!!

வடபகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள் முன்கூட்டி அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை தொலைநகல் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
+94112328109 என்ற தொலை நகல் இலக்கத்திற்கும் modclearance@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள், மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு பிரதேசத்தின் வடக்கு, வவுனியா மாவட்டத்தின் ஓமந்தையில் இருந்து வடக்கு நோக்கியுள்ள பிரதேசங்களுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களில் முழு பெயர், கடவுச்சீட்டின் இலக்கம், பயணத்தை தொடங்கும் நாள், மீண்டும் திரும்பி வரும் திகதி, பயணத்திற்கான காரணம், பயணம் செய்ய போவது தனிப்பட்ட வாகனத்திலா அல்லது வேறு போக்குவரத்து சாதனத்திலா என்பதை குறிப்பிட வேண்டும்.


தனிப்பட்ட வாகனத்தில் பயணம் செய்பவர் என்றால், அந்த வாகனத்தின் பதிவு எண், சாரதியின் பெயர் உட்பட விபரங்களை முன்வைக்க வேண்டும்.

அதேவேளை வடக்கு பிரதேசத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அல்லது முதலீட்டு பணிகளுக்காக செல்வதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக