வெள்ளி, 31 அக்டோபர், 2014

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை-2013ல் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம், செம்மலை மகாவித்தியாலயம் மற்றும் அலம்பல் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் இருந்து கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை-2013ல் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் நேற்று 29.10.2014 முற்பகல் குமுழமுனை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குமுழமுனை மகாவித்தியாலய அதிபர் திரு. ம.கமலகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சிததார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி உ.முனீஸ்வரன் (வலயக் கல்விப் பணிப்பாளர், முல்லைத்தீவு) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக திரு. ந.விஜயரத்தினம்(அதிபர் செம்மலை மகாவித்தியாலயம்), மேர்வின் ஜீவராசா(அதிபர் அலம்பில் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், திரு. க.சிவநேசன்(பவன்) தமிழீழ மக்கள் விடுதலைக்கழக வன்னிப் பிராந்திய இணைப்பாளர்), திரு. கே.தவராசா (தலைவர், சாய் சமுர்த்தி, தண்ணீருற்று) ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன்போது பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதற்கான நிதிப்பங்களிப்பினை லண்டனிலே வசிக்கின்ற புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு.தர்மலிங்கம் நாகராசா அவர்கள் வழங்கியிருந்தார்.
இங்கு உரையாற்றிய புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இந்த மூன்று பாடசாலைகளுமே யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வி பயிலும் பாடசாலைகளாகும்.
இங்கு எதுவித வசதிகளும் இல்லாததுடன், நகரப் பாடசாலைகளைப் போலல்லாது இப்பாடசாலைகள் பௌதீக வழங்கல் மிகவும் குறைந்த பாடசாலைகளாகும். இத்தகைய வசதிகளற்ற நிலையிலும் இந்த மாணவர்கள் தங்களது திறமைகளைக் காட்டி க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இப்போது இவர்கள் உயர்தரக் கல்வியைக் கற்கின்றார்கள்.
இப்பகுதி பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உதவிகளை செய்துவருகின்ற லண்டனில் வசிக்கும் புளொட் அமைப்பைச் சார்ந்த திரு. தர்மலிங்கம் நாகராசா அவர்கள் இவர்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தான் தொடர்ந்தும உதவுவதாக உறுதியளித்திருக்கின்றார்.
குறிப்பாக இந்த வன்னிப் பகுதியிலே பல பாடசாலைகள்; மற்றும் ஏழைச் சிறார்களுக்கு அவர் தொடர்ந்து உதவி வருகின்றார். இந்த வகையிலேயே அவர் இப்பிள்ளைகளுக்கான பாராட்டுவிழா நிகழ்விற்கான உதவியினையும் வழங்கியிருக்கின்றார்.
அத்துடன், இந்தப் பிள்ளைகளின் வளர்ச்சியிலே நாமெல்லோரும் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த கிராமங்களின் அபிவிருத்தியானது இந்தப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலேதான் தங்கியிருக்கின்றது என்று தெரிவித்தார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக