வியாழன், 5 ஜூன், 2014

வடக்கு,கிழக்கு தமிழரின் பாரம்பரிய தேசம்; அதை மறைக்க முயற்சிக்கிறது அரசு: முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு!!

வடக்கு,கிழக்கு மாகாணங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். இப்பொழுது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த அரசினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கும் வடக்கும் சேரும் இடங்களை மறைக்கச் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்.

தொல்புரம் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையக் கட்டடத் திறப்பு நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு
நடைபெற்றது. இந்த நிகழ்வில் இணைப்பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்பேதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வில் முதலமைச்சர் ஆற்றிய உரை அப்படியே வருமாறு:- யாழ் மாவட்டத்தில் பதினான்கு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. தொல்புரம் கிராமத்தில் 1957ஆம் ஆண்டு அம்பலவானர் தையல்பாகர் என்ற இக்கிராமத்தைச் சேர்ந்த கொடையாளி ஒருவரால் இங்குள்ள மருத்துவ நிலையம் ஆரம்பிக்கப்பட்டு சுகாதாரத் திணைக்களத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. நீண்ட காலமாக இவ்வைத்தியசாலை அன்பளிப்புச் செய்யப்பட்ட பழைய கட்டிடத்திலேயே இயங்கி வந்தது.

அப்போது தான் இதைக்கண்ணுற்ற அப்பெரியவரின் பேரனும் தற்போது இங்கிலாந்தில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான இங்கு வருகை தந்திருக்கும் இராஜபட்சம் ஸ்ரீரங்கபட்சம் அவர்கள் இவ்வைத்தியசாலைக்கு இப் புதிய கட்டிடத்தை நிர்மாணித்து சுகாதார திணைக்களத்திற்குக் கையளித்துள்ளார். ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் என்பது இலங்கையிலுள்ள வைத்தியசாலைக் கட்டமைப்பிலுள்ள ஆரம்ப நிலைக் கட்டமைப்பாகும்.

இங்கு வெளிநோயாளர் பிரிவும், சிகிச்சைகள் இடம்பெறும். அவ்வாறான ஒரு ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு நிலையத் திறப்பு விழாவே இன்று விமர்சையாக நடந்தேறியது. இன்று எமது புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாம் பிறந்த, தமது முன்னோர் பிறந்த தமிழ் மண்ணை மறவாது உதவ முன்வந்துள்ளமை பாராட்டத்தக்க ஒரு விடயம். பல அடிப்படை விடயங்களை இத்தருணத்தில் பேசினால் என்ன என்று எனக்குப் படுகிறது. கலவரங்களும் காலத்தின் கோலமும் எங்கள் மக்களைப் புலம்பெயர வைத்தது என்னவோ உண்மைதான்.

அவ்வாறு சென்றவர்கள் உள்ளச் சுமைகளுடனேயே வெளிநாடு சென்றார்கள். எம்மை நாம் பிறந்த பூமியில் வாழ விடவில்லை; எம்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன் பாகுபாட்டுடன் நாம் நடத்தப்பட்டோம்; நடைமுறை வாழ்க்கையிலிருந்து நாம் ஒதுக்கி வைக்கப்பட்டோம் என்றெல்லாம் மனம் வெதும்பித்தான் பிறநாடுகள் சென்றார்கள் எம்மவர்கள். ஆனால் அவ்வாறு சென்றவர்களில் கையால் எண்ணக் கூடியவர்களே களத்தை மறவாது திரும்ப வந்து தமது கடப்பாடுகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

பலர் இங்குள்ள தமது உறவுகளுக்கு உரிய உதவி வழங்குவது என்னவோ உண்மைதான். எம்மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற போது இங்கிருந்தவர்கள் சொல்லொண்ணாத் துன்பங்களையுந் துயரங்களையும் அனுபவிக்க நேர்ந்தது. அவற்றின் களநிலைப் பாதிப்புக்கள் வெளிநாடு சென்ற எம்மவரைப் பாதிக்கவில்லை. உள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள். எனினும் இப்பொழுது சமாதானம், அமைதி என்று சூழல் மாறுபடத் தொடங்கியதும் அவர்கள் தமது உறவுகளுக்கும் தாம் பிறந்த மண்ணிற்கும் என்ன செய்ய முடியும் என்று எண்ணத் தொடங்கியிருப்பது அவர்களின் தாய்நாட்டுப் பற்றை எடுத்துக் காட்டுகிறது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களானவை எமது தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரிய இடங்கள். இப்பொழுது அவற்றின் தொடர்புகளைக் கொச்சைப்படுத்த, தமிழரின் முழுமையான தொடர் இடம் என்ற கருத்தை அப்புறப்படுத்த அரசாங்கத்தினால் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கும் வடக்கும் சேரும் இடங்களைத் தொடர் தமிழ்ப் பிரதேசம் என்று அடையாளம் காட்டாதவாறு சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றுமுன்தினம் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் போன்ற இடங்களைச் சென்று பார்த்தேன்.

களப்பின் அடுத்த பக்கத்தில் கிழக்கு மாகாணக் கிராமமான தென்னைமரவாடி இருக்கின்றது. தொடர்ச்சியாகத் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்த அந்த இடத்தில் தமிழர் தாயகம் தொடர்ச்சியாக என்றுமே இருந்ததில்லை என்று காட்டும் நோக்கில் அங்கு சுமார் 350 சிங்களக் குடும்பங்கள் கொண்டு வரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளார்கள். முன்னர் நீர்கொழும்பில் இருந்து காலத்திற்குக் காலம் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சியின் போது சில மாதங்களுக்கு மீன் பிடிப்பில் ஈடுபட அங்கு வந்தவர்கள் தற்போது தமது குடும்பங்களையும் கொண்டு வந்து குடியேறியுள்ளார்கள். இவர்களுள் முன்னர் அங்கு வந்து சென்ற சிங்கள மீன்பிடியாளர்களை விட வேறு நூற்றுக்கணக்கான பலரும் அடங்குவர்.

சிறிது சிறிதாக அவர்களின் ஆக்கிரமிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. இதை ஏன் கூறுகின்றேன் என்றால் இன்றைய காலகட்டம் மிகப் பொல்லாத காலகட்டமாக மாறியுள்ளது. மிக வேகமாக, மிக உக்கிரமாக ஆக்கிரமிப்பும் வெளியார் குடியேற்றங்களும் இராணுவ உதவியுடன் வடகிழக்கு மாகாணங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. நாம் வெளிநாட்டில் இருந்து வந்து நம்மவருக்கு வைத்திய வசதிகளையுந் கொடைகளையுந் தந்து உதவிக் கொண்டிருக்கும் போது எமது பாரம்பரிய நிலங்கள் பறிபோகின்றன. வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயகம் என்ற அந்தக் கருத்திற்கு மாறான நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை உங்கள் எல்லோர் மனங்களிலும் பதிய வைக்க விரும்புகின்றேன்.

பல காணிகளை வடமாகாணத்தினுள், அதுவும் யாழ். குடா நாட்டினுள், இராணுவம் ஆக்கிரமித்து அவற்றைச் சட்டப்படி கையேற்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றது. நாங்கள் எமது வீட்டு நிலத்தைச் சுத்தப்படுத்த ஒரு பாத்திர நீரினுள் ஒரு சில துளி டெற்றோலையோ பைனோலையோ ஊற்றுகிறோம். பின்னர் அந்தப் பாத்திரத்தில் இருக்கும் கிருமிநாச நீர் தன் வேலையைச் செய்கின்றது. நிலத்தைச் சுத்தப்படுத்துகிறது.

அதேபோல் மக்களின் மத்தியில் அவர்கள் நிலங்களைத் தமதாக்கி அங்கு இராணுவத்தினரைப் வதிய வைத்து விட்டார்களானால் அதன் பின் அங்குள்ள கலாசாரப் பண்புகளையும், வாழ்க்கை முறைகளையுஞ் சுற்றாடலையும் ஏன் வழங்கு மொழியினைக் கூட மாற்றி அமைத்து விடலாம். கிருமி நாச நீர் போல் இருந்து பாரம்பரியங்களை முற்றாகஅழத்து விடலாம்.

பலருக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக இனப் படுகொலைக்கொப்பான நுண்ணிய நடவடிக்கைகள் புரிவதாகத் தெரியவில்லை. மரங்களைக் காண்கின்றோம். ஆனால் அங்கு இருக்கும் வனத்தை அடையாளம் காணாது வாழ்கின்றோம். அன்றாட தேவைகளில் மூழ்கி விடுகின்றோம். எமக்கு இன்று தடையின்றிக் கொடை கொடுத்ததைக் கொண்டாடும் இந்த விழாவிலே மனக் கசப்பைத் தரும் விடயங்களை இவர் பேசுகின்றாரே என்று என் அன்பார்ந்த மக்கள் நினைத்துவிடக் கூடாது.

நாங்கள் போய்ப் பார்த்தால்த்தான் நடைபெறும் அனர்த்தங்கள் புரிபடும். ஒட்டிசுட்டானில், கொடுத்த அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மூன்று மடங்கு கருங்கல்லைத் தெற்கிலிருந்து வந்துள்ள ஒரு கம்பெனி அகழ்ந்தெடுத்துச் சென்றுள்ளது. இது எப்படி நடந்தது என்றே புலப்படவில்லை. கொழும்பில் தரப்பட்ட அனுமதிப் பத்திரம் என்பதால் எம் மாகாண அலுவலர்கள் அதைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் இருந்தார்களோ அல்லது அவ்வாறு இருத்தி வைக்கப்பட்டார்களோ எமக்குத் தெரியாது.

மருத்துவ பராமரிப்பு நிலையம் இங்கு கட்டப்பட்டுத் திறந்து கொண்டிருக்கும் போது எமது வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே எமது மக்களுக்கு இங்கு நடப்பதைத் தான் நான் கூறி வைக்கின்றேன். இந்த இனிமையான நன்நாளை துயரப் படிவு கொண்ட நாளாக மாற்றுவது எனது நோக்கமல்ல. எமது மக்களின் ஒற்றுமைப்பாடும் ஒருமித்த சிந்தனையும் கூட்டுறவும் ஒத்துழைப்புமே எமக்கு வருங்காலத்தில் வளம் கொடுக்கும்; வாழ்வைத் தரும்.

இந்தக் கூட்டுறவுக்கு அடிகோலும் விதத்திலேயே இராஜபட்சம் ஸ்ரீரங்கபடசம் நடந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். அவரைப் போல சுற்றுச் சூழலை, பிரதேசத்தை, கட்டமைப்புக்களைக் கட்டித் தந்து உதவ பலர் முன்வரவேண்டும். அவர் தந்த இந்தக் கொடை எம்மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தட்டும் - என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக