(ஓவியன்) வவுனியா திருநாவற்குளத்தைச்சேர்ந்த தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் பூரண பங்களிப்பில், வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று(23/06/2014) நடைபெற்ற "சரஸ்வதி" சிலை திறப்பு விழா, 2013 இல் சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு, பாடசாலையின் சிறந்த மாணவனுக்கான புலமைப்பரிசில் வழங்கல், பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கல் ஆகிய நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட
முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தற்போதைய வட மாகாண சபையின் யாழ் மாவட்ட உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது உரையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் கிராமங்களில் ஆசான்கள் போல பெற்றோர்களும் அதீத அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் "சரஸ்வதி" சிலையினை திறந்து வைத்து உரைநிகழ்த்திய கௌரவ த.சித்தார்த்தன் , 30 வருட காலம் யுத்தம் நடைபெற்று, எமது மக்கள் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் பதினைந்து இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் உலகம் எங்கு சிதறி வாழ்கின்றனர். இவர்களில் அநேகமானவர்கள் யுத்தத்தின் பெயராலும் சிலரே பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களில் தோழர் தர்மலிங்கம் நாகராஜா தொடர்ந்து எமது பிரதேசத்தில் மாணவசெல்வங்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவரது பணி தொடர வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், எமது ஆசான்கள் போல பெற்றோர்களும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் அதீத அக்கறை செலுத்தினால், எதிர்காலத்தில் தங்களின் வறுமை நிலைமையை போக்கி மாணவர்களும் எதிர் காலத்தில் சிறந்த விளங்குவார்கள் என தெரிவித்தார்.
இவ் நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வன்னி மாவட்ட இணைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்து கொண்டதுடன், நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக முறைசாரா கல்விப்பிரிவின் ஆசிரிய ஆலோசகர் திரு க.திருவருள்நேசன், அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி எல்.எப்.நடேசமூர்த்தி, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும் தற்போதைய கோமரசங்குளம் மகா வித்தியாலய அதிபருமான திரு த.பூலோகசிங்கம், தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலய அதிபர் திருமதி ம.திருவருள்நேசன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு கந்தையா சிவநேசன்(பவன்), எமது கழகத்துடன் நீண்டகாலமாக இணைந்து செயல்படும் இந்த பிரதேசம், எம்மால் உருவாக்கப்பட்ட குடியேற்றங்களை அயலில் கொண்டு காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடசாலைக்கு மின்சாரவசதியை எமது கழகத்தின் மூலம் ஏற்படுத்தியமை யாவரும் அறிந்தது. வன்னி மண்ணில் அபிவிருத்தி, கல்வி, விளையாட்டு என்பற்றிற்கு சேவையாற்றிய ஒரு வன்னியின் சேவையாளரை இன்று யாழ் மாவட்டம் பெற்றுள்ளது, பெருமையளிக்கும் நேரத்தில் எமக்கு இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்வில் உரை நிகழ்த்திய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) எமது கிராம பாடசாலைகளின் பெறுபேறுகளும், இணைப்பாடவிதான செயற்பாடுகளும் சிறப்பாக வெளிவருவது எமக்கு பெருமையளிக்கிறது, திறமையான அதிபர்களின் வழிகாட்டலில், ஆசான்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுதுடன் பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் அதீத அக்கறை செலுத்தவேண்டும் என தெரிவித்தார். எமது தோழர் தர்மலிங்கம் நாகராஜா வவுனியாவில் பல பாடசாலைகளில் தனது சேவையினை எமக்கூடாக கல்வி அபிவிருத்திக்காக மேற்கொண்டுவருகிறார். இவ்வாறு சேவை புரியும் அவரது குடும்பத்தாருக்கு மனமார்ந்த நன்றிகளையும், அவரது சேவை தொடர்வதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இவ் உதவிகளினை வழங்கிய திரு த.நாகராஜா அவர்களுக்கு பாடசாலை முதல்வர் திரு எஸ். உதயகுமார் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் சரஸ்வதி சிலையினை செதுக்கிய இந்தியாவின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிற்ப ஆசாரியாரான கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு திரு த.நாகராஜா அவர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
சிறந்த மாணவனுக்கான மாதாந்த ஊக்குவிப்பு தொகையாக வங்கிக்கணக்கு திரு த.நாகராஜா அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகைப்பணமும் வழங்கப்பட்டது. இவரது கல்வி கற்கும் காலம் வரையும் இவ் ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
2013 இல் சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான பதக்க கெளரவிப்பினை கௌரவ த.சித்தார்த்தன் உட்பட்ட சிறப்பு அதிதிகளினால் வழங்கி கெளரவிக்கபட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வினை கௌரவ த.சித்தார்த்தன் அவர்கள் ஆரம்பித்து வைக்க அதனைத்தொடர்ந்து அதிதிகளால் அனைத்து மாணவர்களுக்கும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதி நிகழ்வான நன்றியுரையினை தொடர்ந்து திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூர்வீகம் செய்திகளுக்காக ஓவியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக