திங்கள், 5 மே, 2014

தமிழக–இலங்கை மீனவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை !!!

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை முடிவுக்கு கொண்டுவர தமிழக–இலங்கை மீனவர்கள் 12–ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
மீனவர்கள் மீதான தாக்குதல்
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்கப்படுவதுடன், படகுகளை சேதப்படுத்தி, மீன் உள்பட பொருட்களை சூறையாடும் சம்பவங்கள் தொடர்ந்து
நடந்து வருகிறது. அவர்களை கைது செய்வதுடன் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வருவதால் தான் கைது செய்யப்படுவதாக இலங்கை தரப்பில் கூறப்படுகிறது. அதேபோல இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் வரும்போதும் கைது செய்யப்படுகிறார்கள்.
சென்னையில் பேச்சுவார்த்தை
இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 27–ந் தேதி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் இருநாட்டு மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி செல்வதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், சிறை பிடிக்கப்படும் மீனவர்களை உடனுக்குடன் பேச்சு நடத்தி விடுவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
12–ந் தேதி பேசுகிறார்கள்
அடுத்தகட்டமாக இலங்கையின் கொழும்பு நகரில் 2–வது கட்ட பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. மார்ச் 13–ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு மார்ச் 25–ந் தேதி பேசலாம் என்றது. ஆனால் அந்த தேதியில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இந்நிலையில் வருகிற 12–ந் தேதி கொழும்பு நகரில் 2–வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை மீன்வளத்துறை நிர்வாக இயக்குனர் நிமல் கூறும்போது, ‘‘வருகிற 12–ந் தேதி இந்திய–இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஒரு நாள் நடைபெறும். இதில் இந்திய மீனவர்கள் 26 பேர், இலங்கை மீனவர்கள் 20 பேர் பங்கேற்கின்றனர். அவர்களோடு இருநாட்டு அரசு பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கிறார்கள்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக