நரேந்திர மோடி தலைமையிலான புதிய இந்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் குமார் டோவல் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை புதிய இந்திய அரசு இன்று விடுத்தது. டோவல் முன்னர் இந்திய உளவுத் துறையான ஐ.பி.யின் தலைவராக 2004 - 2005 ஆம் ஆண்டுகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது அமைச்சரவை அந்தஸ்துள்ள
பதவிக்கு ஒத்தது என்பதும், இந்திய நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இந்தப் பதவியில் உள்ளவருக்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியில் இதுவரை இருந்து வந்த சிவசங்கர் மேனன், காங்கிரஸ் அரசு பொதுத் தேர்தலில் தோற்றமையை அடுத்து இராஜினாமாச் செய்தார்.
டோவலின் நியமனம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றுதான் வெளியானது. எனினும் தமது பணிகளை அவர் கடந்த வாரமே ஆரம்பித்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வாலில் பிறந்த இவர், 1968 இல் கேரளாவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
1999இல் இந்தியன் எயர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கடத்திக் கொண்டுபோய் ஆப்கானிஸ்தான் கந்தகாரில் இறக்கிய சமயம் பணயக் கைதிகளை விடுவிப்பதற்காகத் தீவிரவாதிகளுடன் இந்திய அரசின் சார்பில் சிரேஷ்ட பேச்சுத் தொடர்பாளராக இவரே செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது விவேகானந்தா சர்வதேச நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக