தென் சீனக் கடல் தொடர்பான விடயத்தில் சீனாவுக்கே இலங்கை ஆதரவு வழங்கும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் ஜெனரல் ஸ்கூ குலயங்குக்கு உறுதியளித்துள்ளார். அத்துடன் சீனா தொடர்பான சர்வதேச, பிராந்திய விவகாரங்களிலும் இலங்கையின் அதரவு எப்போதும் சீனாவுக்கே என்றும் அவர் கூறினார். சீன இராணுவத்தின் மத்திய குழுவின் உப தலைவரான எயார் சீஃப் மார்ஷல் தலைமையில் 25 பேர் கொண்ட அணி ஒன்று இலங்கைக்கு மூன்று நாள்
விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. இந்த அணியினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் "சீனா தொடர்பான எங்களுடைய கொள்கைகளை நாம் ஒருபோதும் மாற்றியதில்லை. எங்களுடைய நிலைப்பாடு மிகவும் தெளிவானது" தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள உதவி வழங்கியதற்காக சீனாவுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்த மஹிந்த, யுத்தம் முடிவடைந்து குறுகிய காலமான ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கை மக்கள் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் அனுபவிப்பதாகவும் பெருமிதப்பட்டார்.
அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு சீனா வழங்கிய ஆதரவுக்காக அம்மக்களுக்கு அரசாங்கம் நன்றிக் கடன்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சீனத் தளபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் எமது நட்பு எந்த சக்தியாலும் பிளவுபட முடியாது என்றும் கூறினார். இதேசமயம் அண்மையில் வியட்நாமுக்கு விஜயம் செய்த பிரமர் டி.எம்.ஜயரட்ண, தென்சீனக் கடல் விவகாரம் தொடர்பில் வியட்நாமுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் இது பெரும் சர்ச்சையும் கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக