சனி, 17 மே, 2014

தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா உறுதி!!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாறு காணாத மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அன்பார்ந்த தமிழக மக்கள் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ததன் மூலம், தங்களுடைய முழுமையான நம்பிக்கையை என் மீது
வைத்திருக்கிறார்கள் என்பதனை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நான் என்றும் தமிழக மக்களின் மேன்மைக்காகப் பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நல்லாட்சி நடத்தி வரும் என் மீதும், எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதும் நம்பிக்கை வைத்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை 37 தொகுதிகளில் தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்து, எதிர்க்கட்சிகளுக்கு தக்கப் பாடம் புகட்டியுள்ளனர்.

ஆலந்தூர் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளரை வாக்காளப் பெருமக்கள் அமோக வெற்றி பெற வைத்துள்ளனர். மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தனிக் கட்சியும் பெறாத அளவுக்கு, 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்தத் தேர்தல் மூலம், தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவு பெற்ற தனிப் பெரும் முதன்மைக் கட்சி அ.தி.மு.க. தான் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ், ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் சுயநலவாத தி.மு.க., மற்றும் இதர சுயநல உதிரிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

சுயநலவாதிகளை புறந்தள்ளிவிட்டு பொதுநலத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளதை இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டுகிறது. அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், இதயங்கனிந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மூலம் நிறைவேற்றிட அயராது பாடுபடுவேன், ஓயாது உழைப்பேன் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக