சனி, 17 மே, 2014

நரேந்திர மோடிக்கு டேவிட் கேமரூன் வாழ்த்து!!

இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராகக் களம் இறங்கிய நரேந்திர மோடி பெரும் வெற்றி பெற்றதுடன் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தக் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் இந்தத் தேர்தலில் பெரும் சரிவைக் கண்டுள்ளது.

மோடியின் இந்த வெற்றி குறித்து வாழ்த்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இந்தியா-இங்கிலாந்து உறவுகள் மேம்பட
இவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் அந்நாட்டுப் பிரதமரின் அதிகாரபூர்வ 10, டௌனிங் தெரு அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் ஹேகும் மோடிக்கு வாழ்த்துகளை அனுப்பியுள்ளார். இந்தியாவுடன் இங்கிலாந்துக்கான உறவுகள் வலுவானது ஆகும். இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தி இரு நாடுகளுக்குமான பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் செழிப்பு போன்றவற்றைப் பெற புதிய இந்திய அரசுடன் இணைந்து செயல்படுவதை முன்னோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டில் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது அங்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக்கலவரங்கள் தோன்றின. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறக்க நேரிட்டதை முன்னிட்டு அப்போதைய இங்கிலாந்து அரசு மோடியைப் புறக்கணித்தது. பத்தாண்டுகளுக்குப் பிறகே இந்தியாவுடனான பொது உறவுகளை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அவரை இங்கிலாந்து அழைத்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக