அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் மக்களைக் கொல்வதற்கு ஆணை வழங்கிய இராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கம் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வழங்கி ஊக்குவிக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கம்பஹா - வெலிவேரியவில் சுத்தமான குடிதண்ணீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்களை இராணுவத்தினர் தாக்கியதில் மூவர்
உயிரிழந்தனர். 37 பேர் படுகாயமடைந்திருந்தனர். இந்தத் தாக்குதலுக்கு கட்டளையிட்ட 142 ஆவது படையணியின் தளபதி பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் விசாரணைகள் முடிவடையும் முன்பாகவே தேசப்பிரிய குணவர்தனவை துருக்கிக்கான இலங்கைத் தூதுவராக அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த விடயம் குறித்து பி.பி.ஸி. செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த ராமநாயக்க எம்.பி. மக்களைக் கொல்ல ஆணை வழங்கியவர்களுக்கு அரசாங்கம் முக்கிய பதவிகளை வழங்கி ஊக்குவிப்பதாகக் குற்றஞ் சாட்டினார். மேலும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இது தொடர்பான அறிக்கை வெளிவரும்போது மேற்படி தாக்குதலில் பலியான பொதுமக்களும் தம்மைத் தாமே சுட்டுக்கொண்டு பலியானார்கள் என்று கூறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, 2012 ஆம் ஆண்டில், வெலிக்கடை சிறையில் 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான அறிக்கையில் கைதிகள் தம்மைத் தாமே சுட்டு இறந்தனர் என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தமை இதற்கு சிறந்த உதாரணம் என்றும் கூறினார். இந்த விடயங்கள் குறித்து இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்தவை வருமாறு:- வெலிவேரிய தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவ நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளது. இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே பிரிகேடியர் தேசப்பிரிய அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
அத்துடன் வன்னியில் நடத்தப்பட்ட இறுதிப் போரின்போது பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன வெளிப்படுத்திய திறமைகளுக்குப் பரிசாகவே அவருக்குத் தூதுவர் பதவி வழங்கப்பட்டது. வெலிவேரிய தாக்குதல் சம்பவத்துக்கும் தூதுவர் பதவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - என்றும் அவர் கூறினார். இதேபோன்று 58 ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா, போரின் பின்னர் ஐ.நாவுக்கான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டமையும் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, வன்னி இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரிகளுக்கு, அவர்களுக்குஎதிரான சட்ட நடவடிக்கைகளில் இருந்து அவர்களைப பாதுகாக்கவே அரசாங்கம் வெளிநாட்டு இராஜதந்திரப் பதவிகளை அளிப்பதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக