வெள்ளி, 12 நவம்பர், 2010
வேலணை வல்லுறவு முயற்சி சந்தேகநபர்கள் விடுவிப்பு..!
யாழ். வேலணை முதலாம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் இரவுவேளை புகுந்து அங்கிருந்த யுவதியை இழுத்துவந்து பாலியல் குற்றம்புரிய முற்பட்டனரென்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு இளைஞர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி மு.றெமீடியஸ் தாக்கல்செய்த பிணை மனுவின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த மாதம் 9ம் திகதி வேலணை முதலாம் வட்டாரத்திலுள்ள வீடொன்றினுள் நள்ளிரவுவேளை நுழைந்த பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கிருந்த யுவதியொருவரை வெளியே இழுத்து வந்து பாலியல் குற்றம் புரிய முயன்றுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் குறித்த யுவதியின் சகோதரன், சகோதரி, மைத்துனி ஆகியோரும் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இதனால் அவமானம் தாங்கமுடியாத யுவதி அலரிவிதை உட்கொண்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட யுவதி தற்போது பராமரிப்பு இல்லமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் முதலாம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இவரின் வாக்கு மூலத்திற்கிணங்க யாழ். புறநகர்ப்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்கள் கடந்த 6ம் திகதி சனிக்கிழமை ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி இரா.வசந்தசேனன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர்களின் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி மு.றெமீடியஸ் விடுத்த பிணைமனுக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இருவரையும் தலா 20ஆயிரம் ரூபா காசுப்பிணையிலும் தலா 20ஆயிரம் ரூபா ஆட்பிணையிலும் விடுதலை செய்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி இருவரையும் மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக