புதன், 29 செப்டம்பர், 2010
40 தினங்களில் 9 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு : சந்தேகத்தில் இருவர் கைது..!!
கல்பிட்டி, முந்தல் மற்றும் புத்தளம் பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி விற்பனை செய்து வந்ததாகச் சொல்லப்படும் இருவர் சந்தேகத்தின் பேரில் கல்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 40 தினங்களுக்குள் ஒன்பது மோட்டார் சைக்கிள்கள் இவர்களால் திருடப்பட்டுள்ளன. அந்த ஒன்பது மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டுள்ள நுரைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களில் ஒருவர் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் எனவும், மற்றவர் அவருக்கு உதவியவர் எனவ்ய்ன் பொலிசார் தெரிவித்தனர். இந்த மோட்டார் சைக்கிள்கள் புத்தளம், மதுரங்குளி, முந்தல், புளிச்சாக்குளம் போன்ற பிரதேசங்களில் திருடப்பட்டு அவை நுரைச்சோலை, பாலக்குடா, பாலாவி போன்ற பிரதேசங்களில் விற்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள்கள் முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று குறைந்த விலைக்கே, சந்தேக நபர்கள் விற்று வந்துள்ளனர். பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்களைத் திருடும் இவர்கள் அவற்றின் இலக்கத் தகட்டினை மாற்றிவிட்டே விற்பனை செய்துள்ளனர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து அறிய முடிந்ததாக பொலிசார் தெரிவித்தனர். பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவலையடுத்து முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் ரண்வலஆராச்சி தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக