ஞாயிறு, 10 அக்டோபர், 2010
இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியில் இணைவு..!
பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன், மலையக மக்கள் முன்னணியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வாரென்ற நம்பிக்கை உள்ளதால் அவரை கட்சியில் இணைத்துக்கொண்டதாக முன்னணியின் தலைவி திருமதி சாந்தினி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அமரர் சந்திரசேகரனுடன் நட்புறவை வைத்திருந்த அவர் முன்னணியின் அரசியல் செயற்பாடுகளை புத்துயிர்பெறச் செய்வாரென்று நம்பிக்கை கொண்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் கொண்ட தேசிய கவுன்சில் ஏகமனதாக இணங்கி முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கட்சியின் அரசியல்துறைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பேற்பாரென்றும் எதிர்வரும் 21ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் திருமதி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளங்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினரான இராதாகிருஷ்ணன் எம்.பி. மலையக மக்கள் முன்னணியில் இணையப்போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அவருக்குக் கட்சியில் முக்கிய பொறுப்பொன்றை வகிப்பதில் இணக்கம் ஏற்படாததால், சர்ச்சையும் இழுபறியுமாகவிருந்தது. எனினும், கடந்த இரண்டு தினங்களாக கொழும்பில் நடந்த நீண்ட கலந்துரையாடலின் பின்னர் சுமுகத் தீர்வொன்று எட்டப்பட்டுள்ளது. இதனையடுத்தே அவருக்கு கட்சியின் அரசியல்துறைத் தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமது நிலைப்பாட்டை விளங்கி இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு அடுத்தவாரம் கடிதமொன்றைக் கையளிக்கப்போவதாக இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக