வெள்ளி, 1 அக்டோபர், 2010

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளில் அதிகளவிலானோரின் விண்ணப்பங்களை நிராகரிக்க ஆஸி தீர்மானம்..!!

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளில் அதிகளவிலானோரின் விண்ணப்பங்களை நிராகரிப்பதென அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தென்படுகிறது. இந்நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினக் குழுக்கள் துன்புறுத்தலுக்குள்ளாகும் அபாயம் குறைவாக இருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் நம்புவதாக கசியவிடப்பட்ட ஆவணங்கள் மூலம் அறியவருவதாக த அவுஸ்திரேலியன் பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது. இதேவேளை, புகலிடம் கோருவோர் எனச் சந்தேகிக்கப்படும் 18பேருடன் படகொன்று புதன்கிழமை இரவு அஸ்மோர் தீவுகளுக்கு வடபகுதியில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது இந்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தடைந்துள்ள 97 ஆவது படகாகும். இதுவரை படகுகள் மூலம் 4,612 பேர் அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்துள்ளனர். கொள்கை நிலைப்பாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கசிந்திருக்கும் அறிக்கையில் புகலிடம் கோருவோரென அதாவது இன அடிப்படையில் புகலிடம் கோருவோர்கள் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுபவற்றில் பாரதூரமான சந்தேகங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் துன்புறுத்தலுக்கு இலக்காகுவது இப்போது குறைந்தளவிலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அகதிகளின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதை அவுஸ்திரேலிய முடக்கி வைத்திருந்த நிலையில் இப்போது அவற்றை பரிசீலிப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக