புதன், 20 அக்டோபர், 2010

பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும்-கிளிநொச்சி புனித திரேஸா கல்லூரி அதிபர் வேண்டுகோள்..!

பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கருணை உள்ளம் கொண்டவர்கள் உதவ வேண்டும். அவர் களுடைய எதிர்காலத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என கிளிநொச்சி புனித திரேஸா பெண்கள் கல்லூரியின் அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம். பரிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு மகளிர் கல்லூரி புனித திரேஸா மகளிர் கல்லூரி ஆகும். ஒரு சமூகத்தின் அளவு கோலான கல்வித்துறை இங்கு திட்டமிடப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வுகள், செல் வீச்சுகள் மத்தியில் சோதனையும், வேதனையும் ஏற்பட்டபோதும் இக்கல்லூரி பல சாதனைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். போர்க் கெடுபிடி களுக்கு மத்தியில் 2007ஆம் ஆண்டு 5 தரம் புலமைப் பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் 190 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்துச் சாதனை நிகழ்த்தியது இந்தக் கல்லூரி. குறைந்த வளங்கள், தேவை யான அடிப்படை உட்கட்டமைப் புகள் இல்லாதபோதும் இம்முறை இக்கல்லூரியில் இருந்து 7பேர் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர். தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 165 புள்ளிகள் வரை பெற்று 10 பேர் சித்தியடைந்துள்ளனர். 22 பேர் நூறு புள்ளிகளைப் பெற்றுள்ளனர் என இப்பாடசாலையின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டினார் கல் லூரி அதிபர். இறுதிக்கட்டப் போரின் போது எமது பாடசாலை மாணவர்கள் 15 பேரையும் ஓர் ஆசிரியையும் இழந்துள்ளோம். தாய் தந்தை இருவரையும் இழந்த எட்டு மாணவிகளும் பெற்றோரில் ஒருவரை இழந்த 150 பிள்ளைகளும் இந்தக் கல்லூரியில் கல்வி கற்கின்றனர். எதுவுமே இல்லாத நிலையில் இருந்த இவர்களுக்குச் சில சமூக அமைப்புக்கள் உதவி செய்துள்ளன என்பதையும் கூறவேண்டும். கற்றல் உபகரணங்கள், சீருடைகள், அன்றாட உணவு என்பன இவர்க ளுக்கு வேண்டும். எனவே அநாதரவற்ற நிலையில் இருக்கும் இப்பிள்ளைகளைத் தமது தத்துப் பிள்ளைகளாகக் கருதி கருணை உள்ளம் கொண்டவர்களும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து உதவ முன்வரவேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார் கல்லூரி அதிபர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு பெண்கள் பாட சாலையான எமது கல்லூரிக்கு எவ்விதமான பாதுகாப்பும் இல்லை. இதற்கு உடனடியாகப் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் தேவை. முதலில் கம்பி வேலியமைத்து வாயில் கேட் ஒன்றயாவது அமைத்துக் கொடுக்கவேண்டும். இங்கு போதிய வகுப்பறை கள் இல்லை. எங்களுக்குத் தேவை யானது 24 வகுப்பறைகள். ஆனால் மிகவும் நெருக்கமான நிலையில் 14 வகுப்பறைகளை ஏற்படுத்தி உள் ளோம். ஏனைய 10 வகுப்புக்களை மரத்தடிகளிலேயே நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை யில் உள்ளோம். ஏற்கனவே இருந்த ஓலைக் கொட்டில்கள் மூன்றும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியில் க.பொ.த உயர்தரம் வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. மனையியல் கூடம், சங்கீத, நடன அறைகள் இல்லை. விஞ்ஞான கூடத்திற்கு சில வருடங்களின்முன் அத்திவாரம் இடப்பட்ட நிலையில் அப்படியே இருக்கின்றது. அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் வசதி இல்லை. இக்குறைபாடுகளை நிறைவுசெய்து கொடுத்தால் அதுவே ஒரு சிறந்த சேவை என்கிறார் அவர். அதிபரின் அலுவலகம் கூட மூட்டைமுடிச்சுகள் அடுக்கி வைக்கப்பட்ட ஒரு சிறு களஞ்சிய அறையாகவே காணபடுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக