செவ்வாய், 19 அக்டோபர், 2010

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் தொகை அதிகரிப்பு..!

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் தொகை அதிகரித்துவருவதை கருத்திற்கொண்டு அவர்களைத் தங்கவைப்பதற்கு புதிய தடுப்பு நிலையங்களை நிர்மாணிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்பிரகாரம் பேர்த் மற்றும் அடெலெயிட் நகர்களில் இரு புதிய தடுப்புநிலையங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த தடுப்பு நிலையங்களில் 2000பேரை தங்கவைக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பமாக காணப்படும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுப்புநிலையத்திலிருந்து சமூக அடிப்படையிலான தங்குமிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறுவர்களை கம்பிகளுக்கு பின்னால் தடுத்து வைப்பது அவுஸ்திரேலிய வழிமுறை அல்ல என பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். புகலிடம் கோருபவர்களின் பிரச்சினையானது அண்மைய அவுஸ்திரேலிய தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது முக்கிய அம்சமாக விளங்கியது. உரிய ஆவணங்களை வைத்திராத அனைத்து குடியேற்ற வாசிகளையும் அவர்களது புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் செயற்கிரமத்தின் போது தடுத்து வைக்கும் அவுஸ்திரேலியாவின் கொள்கை ஐக்கிய நாடுகள் சபையின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. புகலிடம் கோருபவர்களது பிரச்சினை தொடர்பான மனிதாபிமான அணுகுமுறையின் ஒரு அங்கமாக சிறுவர்களைக் கொண்ட குடும்பங்கள் சமூக அடிப்படையிலான தங்குமிடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார். சிறுவர்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனடிப்படையில் எதிர்வரும் வருட மத்தியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சமூக அடிப்படையிலான தங்குமிடங்களுக்கு மாற்றப்படவுள்ளதாக ஜூலியா கில்லார்ட் கூறியுள்ளார். இது தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் விபரிக்கையில்,அவுஸ்திரேலியா உலகிலேயே மிகவும் கடுமையான புகலிடக் கொள்கைகளிலொன்றை பேண வேண்டிய கட்டாயத்திலுள்ள அதேசமயம் புகலிடம் கோருபவர்களுக்கு வசதியளிப்பதில் அபிவிருத்திகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தார். புதிய நடைமுறையின் மூலம் சிறுவர்களுக்கு பாடசாலை சென்று இயல்பு வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும் என அவர் கூறியுள்ளார். அதேசமயம் புகலிடம் கோருபவர்களுக்கான பிராந்திய நிலையமொன்றை நிர்மாணிக்க கிழக்கு தீமோர் மற்றும் இந்தோனேஷியாவுடன் அவுஸ்திரேலிய அரசாங்கம் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக