புதன், 27 அக்டோபர், 2010
உலக உணவுத் திட்டத்திற்கு உதவி குறைவடைந்தது, இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதிப்பு..!
உலக உணவுத் திட்டத்திற்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கின்ற நிதியுதவி குறைவடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. நிதி உதவி பாதிப்பினால் இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுகின்ற கோதுமை மா மற்றும் சீனி ஆகிய உணவுப் பொருட்களில் 50 வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இதனால் 2 இலட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.உலக உணவுத் திட்டத்திற்கான நிதியுதவியில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற போஷாக்கு உணவு விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் உறவினர் நண்பர்களுடன் வசித்து வருகின்ற இடம்பெயர்ந்த மக்களும் தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கின்ற 25 ஆயிரம் பேருக்கும் உறவினர் நண்பர்களது வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்குமான நிவரண உணவுப் பொருட்களையும் வடக்கு கிழக்கு மகாணங்களில் உள்ள 3 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கும் 2 இலட்சம் கர்ப்பிணிமார் மற்றும் கைக் குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கும் உரிய போசாக்கு உணவுப் பொருட்களையும் உலக உணவுத் திட்டமே வழங்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக