செவ்வாய், 26 அக்டோபர், 2010

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 27நிறுவனங்கள் முதலீடு..!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 27நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக துறைமுக அதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். சீமெந்து பசளை சீனி உணவுப் பொருட்கள் சமையல் எரிவாயு களஞ்சியப்படுத்தல் டின்மீன் சார்ந்த 27 முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் முதலீடு செய்வதற்கு முன்வந்துள்ளனர். இவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இங்கு முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும் என்றும் துறைமுக கட்டணம் தவிர வேறு எந்தக் கட்டணமும் அறவிடப்படமாட்டாதெனவும் துறைமுக அதிகார சபைத்தலைவர் பிரியத் பந்து விக்ரம கூறியுள்ளார். தெற்காசியாவிலே சேவைவழங்கும் பிரதான இடமாக அம்பாந்தோட்டை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும். சர்வதேச தரத்திலான வசதிகள் இங்கு வருபவர்களுக்கு வழங்கப்படும். இதேவேளை அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக முதலாம் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு சிறுசிறு பணிகள் மாத்திரமே தற்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. நவம்பர் 18 ம் திகதி முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்தடைய உள்ளதோடு இரண்டாம் கட்டப் பணிகளும் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படும் என துறைமுக அதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுக இறுதிக்கட்ட பணிகள் குறித்து ஆராய்வதற்காக துறைமுக விமான சேவைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமையிலான குழு நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்தது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவி ஏற்பை முன்னிட்டு சர்வதேச துறைமுகம் திறந்து வைக்கப்பட உள்ளது. இறுதிக் கட்டப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. 18ம் திகதி முதல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தொடர்ச்சியாக கப்பல்கள் வரவுள்ளன. இதனூடாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய அடித்தளமிடப்படுகிறது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றுவதற்கான பிரதான மைல்கல்லாக அம்பாந்தோட்டை துறைமுகம் அமையும். இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 800 அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும். சீனா அரசே இதற்கும் கடனுதவி வழங்குகிறது. மூன்றரை வருடங்களில் 2ம் கட்டப் பணிகள் நிறைவு செய்யப்படும். முதலாம் கட்டத்தின்போது 4 கப்பல்களே நிறுத்த முடியூம். இரண்டாம் கட்ட முடிவில் 10 கப்பல்கள் நிறுத்தக் கூடியதாக வசதி செய்யப்படும். துறைமுக நிர்வாகக் கட்டிடம் 14 மாடிகளுடன் கூடியதாக நிர்மாணிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்திற்கு முன் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும். இறுதிக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. நவம்பர் 18ம் திகதிமுதல் பொதுமக்களுக்கு துறைமுகத்திற்கு வர அனுமதி வழங்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக