ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

இந்திய மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1500 சிமெந்து மூடைகள் பதுக்கி வைப்பு..!

யுத்தம் காரணமாக வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின்போது மக்களுக்கு இந்திய மக்களின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1500 சிமெந்து மூடைகள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தொகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவை மேற்படி கட்டிடத்தில் அடுக்கப்பட்டதாகவும் அவ்வேளையில் ஒரு சில சிமெந்து மூடைகளை மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கிய பின்னர் ஏனையவற்றை வழங்காது அங்கேயே பதுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. மேற்படி மூடைகள் அடுக்கப்பட்டு நீண்டகாலமாக தமது கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினர் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்காமை தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதுடன் கடந்தவாரம் பார ஊர்திமூலம் சில சிமெந்து மூடைகள் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். மக்கள் கொட்டகைகளில் வாழ்ந்து வரும் நிலையில் அவற்றை அவர்களுக்கு வழங்காது வீண்விரயம் செய்தவர்கள்மீது இதுவரை எவரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை எனவும் வவுனியா பொது அமைப்புக்களின் சார்பில் ஒருவர் தெரிவித்தார். பல இலட்சம் ரூபா பெறுமதியான சிமெந்து மூடைகள் பழுதடைந்தமைக்கு சிரேஷ்ட அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, இவ்விடயம் குறித்து வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக