
கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் ஷீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகள் சகிதம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குடாநாட்டின் கள நிலைவரம் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார். நேற்று முன்தினம் காலை பலாலி சென்றடைந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை யாழ். படைகளின் தளபதி மேஜர்.ஜெனரல் மகிந்த ஹத்துரு சிங்க வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பலாலி தலைமையகத்தில் நடைபெற்ற மாநாட்டில், குடாநாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தளபதியினால் பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதன் பின்னர் காங்கேசன்துறைக் கடற்படை முகாமுக்குச் சென்ற அவர், வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எம்.பீ.வீரசேகரவினால் வரவேற்கப்பட்டதுடன் அவருடன் கலந்துரையாடி நிலைமைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் காங்கேசன்துறை கடற்படைத் துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள கடற்படையினரின் கப்பல்கலைத் திருத்தும் பிரிவினையும் திறந்துவைத்தார்.பின்னர் யாழ். நகருக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். நாக விகாரை ஆகியவற்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் யாழ். கோட்டை மற்றும் நகரப் பகுதி ஆகிய இடங்களுக்கும் சென்று நிலைமைகளை அவதானித்தார். அத்துடன் யாழ். நகர சிவில் அலுவலகத்தில் படை அதிகாரிகள் மற்றும் படையினருடன் கலந்துரையாடி அவர்களின் சேம நலன்களைக் கேட்டறிந்தார். மேலும் யுத்தத்தின் பின்னரான நிலைமை, மீள் குடியேற்றம், இராணுவம் மற்றும் பொதுமக்களுக்கிடையிலான உறவு குறித்தும் அவர் கேட்டறிந்தார். இதேவேளை நேற்று முன்தினம் மாலை நயினாதீவு விகாரைக்குச் சென்ற கோத்தபாய அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்நிலையிலேயே ஆனையிறவு முகாமில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத் தூபி நேற்றுக் காலை பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது அங்கு உரையாடிய அவர் யாழில் பொதுமக்களின் காணிகளில் தங்கியுள்ள படையினர் விரைவில் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக