வியாழன், 6 மே, 2010

நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்-பசில் ராஜபக்ச அழைப்பு..!!

யுத்தத்தின் பின்னரான நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென அழைப்பு விடுத்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வடக்கு, கிழக்கு பிராந்தியங்களின் அபிவிருத்தியில் அரசு கூடுதல் கவனம் செலுத்துமெனவும் தெரிவித்துள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் மத்திய வங்கிக்கு முதற்தடவையாக விஜயம் செய்தபோது அங்கு நடைபெற்ற பொருளாதார மற்றும் நிதி அமைப்பு குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்ட பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகித்துவருவது மத்திய வங்கி ஆகும். கடந்த 2வருட காலப்பகுதியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சிபெறுவதற்கு மத்தியவங்கி அளப்பரிய பணி ஆற்றியுள்ளது. அந்த வகையில் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கு மத்திய வங்கியின் தேவை இன்றியமையாததாகும். நாட்டில் 3தசாப்தகாலமாக இருந்து வந்த பயங்கரவாதத்தை ஒழிக்கும் பணியை 2005ல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்நாட்டு மக்கள் வழங்கியிருந்தனர். இதன்மூலம் ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய பாரிய ஆதரவைக் காணக்கூடியதாகவுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்குத் தடையாக இருந்த பயங்கரவாதத்தை ஒழித்ததன்மூலம் மக்களின் ஆணையை வெற்றிகரமாக நிறைவேற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அடுத்ததாகவுள்ள முக்கிய இலக்கான நாட்டின் அபிவிருத்தியையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக