வியாழன், 22 ஏப்ரல், 2010

ஐ.தே.மு. இலிருந்து திகாம்பரமும் விலகினார்..!!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பீ. திகாம்பரம் ஐக்கிய தேசிய முன்னணியியிலிருந்து விலகி தனித்து இயங்கப் போவதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாகவும்அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் திகாம்பரம் கூறியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பீ.திகாம்பரம், நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியின் கீழேயே போட்டியிட்டார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் தமக்கும் தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக திகாம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதப்போக்கு இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் அந்தக்கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் திகாம்பரம் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலே தவிர எதிர்காலத்திலும் அந்தக் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் கருத்துக்கள் நகைப்புக்கிடமானவை என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக