ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

உண்மை கசக்கும் ! -ஊர்க்குருவி (வாசகர் கருத்து)

இது இன்று நேற்றல்ல எப்போதோ தெரிந்த உண்மை. ஆமாம் உண்மை கசக்கும் என்பது எம் எல்லோராலும் அனுபவிக்கப்பட்ட ஒரு உணர்வு. நாம் அனைவரும் மனிதர்கள் நாம் தமிழ் என்னும் மொழியின் மீது காதல் கொண்டு அன்னை மண்ணின் விடுதலைக்காய், விடிவிற்காய் எம்மது பங்கை அளிக்கிறோம் என்று புறப்பட்டபோது எமது அப்போதைய மனநிலையைப் பொறுத்து ஒவ்வொரு இயக்கத்தின் போக்கைத் தெரிவு செய்தோம். அதற்காக நாம் அப்படிப் புறப்பட்ட போது அனைத்தையும் கற்றுத் தெளிந்து புறப்பட்டோம் என்று இன்று பச்சைப் பொய்களை அவிழ்த்து விடுவது சிரமமல்ல. ஒவ்வொருமுறை உள்ளத்தின் உணர்ச்சிகளை கட்டுரையாய் வடிக்கும் போதும், பழையதையே பேசாதே ! வாயை மூடு! மண்டைக்குள் ஒன்றுமே இல்லையா? என்னும் வசவுகள் என்னை நோக்கி வீசப்படுகின்றன.

தமிழின் விடிவிற்காக புறப்பட்ட அனைவரும் ஒருதாய்ப் பிள்லைகள், சகோதரர்கள் தம்முள் சண்டை பிடித்தாலும் அந்நியர் முன் ஒன்றாய் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் எமது பண்டைய காலத்துப் புரட்சிப் பாவலர்களுக்குக் கூட இருந்தது. எல்லாவற்றையும் இயல்பாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் எழுதத் தலைப்படுவதன் நோக்கம் என்ன?

நான் பங்கு வகித்த இயக்கத்தில் அவர்கள் செய்த செயற்பாடுகளில் எனக்கும் சில பங்குகளுண்டு. என்னை அறியாமல் நடந்த தவறுகளை நான் கூட நியாயப்படுத்திய காலங்களுண்டு. அத்தகைய செயற்பாடுகளினால் நெஞ்சில் தங்கியுள்ள உணர்வுகளைச் சுத்திகரிக்கும் வகையிலேயே பல பழையவைகள் அலசப்படுகின்றன. யாருடைய எழுத்தாயினும் சரி அதில் உள்ள உண்மைகளை ஆராயாமல் உதாசீனப்படுத்தும் பண்பு எம்முள் உறைந்து போயிருப்பதே எமது இனத்தின் சாபக்கேடு.

துரையப்பா காலந்தொட்டு, சமீபத்தில் ஆனந்தசங்கரி வரை நாமே நீதிபதியாய், நாமே நடுவர்களாய் நாம் கொடுத்த தண்டனைகளையும், அவப்பெயர்களையும் நாம் எமது விடுதலையின் பெயரால் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறோம். எம்மை நாம் விடுதலை படுத்திக் கொள்ள நினைப்பது எதற்காக? விடுதலை அடைந்த மிருகங்கள் என்று பெயர் சூட்டிக் கொள்வதற்காகவா ?

அன்னை மண்ணின் விடுதலை என்று பீற்றிக் கொள்கிறோமே ! அந்த அன்னை எம்மைத் தன் குழந்தைகள் என்று சொல்ல வெட்கப்படும் வகையில் நாம் நடந்து கொள்வதுதான் எமது விடுதலைப்பாதையா ?

இன்று புலம்பெயர் சமுதாயங்களில் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம். நம்மில் எத்தனையோ பெயர் விடுதலைப் போராட்டத்தில் எதுவித பங்கும் எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களால் ஒருவராகக் கூட இல்லாமல் அந்த விடுதலை போராட்டத்தைக் காரணம் காட்டி வெளிநாடுகளில் புகலிடம் கோரி வசதியான வாழ்வை அனுபவித்து வருகிறோம் ?.. என்னையும் சேர்த்துத் தான் !

போர்...போர்... உக்கிரமான போர் தாய்மண் விடுதலை அடையும் வரை போர்... என்னும் கூக்குரலோடு கையிலிருக்கும் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு பயாஸ்கோப் படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.

புலம்பெயர் சமுதாயங்களில் இருக்கும் எத்த்னை வீதமானோர் தாம் விடுவிக்கத் துடிக்கும் தாய்மண்ணுக்காக தம் மகன்களையோ அன்றி மகள்களையோ விடுதலை இயக்கத்துடன் போராட அனுப்பியுள்ளோம்? இல்லை அவர்களை டாக்டராகவும், எஞ்ஞினியராகவும், அக்கவுண்டண்ட் ஆகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நாம் காண் நினப்பதோ தமிழீழம் யார் அதற்காகப் போராடப் போகிறார்கள்? போஷாக்கு அற்ற, அன்றைய வாழ்க்கைக்க்காகத் தவிக்கும் ஏழை மக்களே! ஓ அவர்களுக்குதான் தமது நாட்டை விட்டு வெளியேற வசதியில்லையே! அன்றாடம் உணவுக்கு அல்லாடும் அடிமட்ட மக்களின் குழந்தைகளை வலுக்கட்டாய்மாக இழுத்துச் சென்று போர்முனையில் பலிகொடுத்த நிகழ்வுகளுக்காக நாம் பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தோம்.

புலம்பெயர் நாடுகளில் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?

எந்தநாடு எமக்கு அடைக்கலம் கொடுத்ததோ அந்த நாட்டிற்கு சிறிதளவும் நன்றி கூடக் காட்டாமல் அவர்களை புறஞ்சொல்லித் தூற்றிக் கொண்டு அவர்கள் கொடுக்கும் அனைத்து வசதிகளையும் நன்றாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஆமாம் "மண்டைக்குள்ள ஒன்னுமே இலலாதவன் " சொல்லும் செய்திதான் இது.

தமிழனின் பண்பு என்ன? வந்தாரை வாழவைகும் தமிழன், தன்னை வாழ வைப்பவனுக்கு உண்மையாக இருக்கக் கற்றுக் கொண்டானா? உண்மைகளை ஏற்றுக்கொள்ள முதலில் பழகுவோம்.

உட்கொலைகள் நடத்தாத இயக்களே இருக்கவில்லை. இதிலே யாரையும் உயர்த்திக் கூறுவது என் நோக்கமல்ல. யாருக்காகவும் வக்காலத்து வாங்குவதும் எனது நோக்கமல்ல. அமிர்தலிங்கம் தவறு செய்தார், யோகேஸ்வரன் தவறு செய்தார் என்னும் வாதங்கள் ஜனநாயகமாக தேர்தல் மேடைகளிலே விவாதித்தால் அது அரசியல் மரபு. ஆனால் துப்பாக்கிகள் மூலம் அவர்களுக்கு மரணதண்டனை அளித்து விட்டு தாம் அவர்களின் பாணியில் பேச்சு நடத்துவது அரசியல் மரபல்ல.

நடந்தவைகள் எல்லாம் கடந்தவைகளே ! இனியாவது உண்மைகளை இப்படியான பொதுத்தளங்களில் ஏற்றுக்கொள்ளத் தயங்கினாலும் உங்கள் மனங்களிலே கேட்டுப் பாருங்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் காணத் தவிக்கும் தலைவர்களிடம் அவர்கள் வாரிசுகளை அவ்வரசாங்கத்தின் தேர்தல்களில் போட்டியிடுமாறு கேளுங்கள். அப்போது தெரியும் இவர்களின் கனவுகளுக்கு யார் பலிகடாக்களாக்கப்படப் போகிறார்கள் என்று.

அன்பான தமிழ் உறவுகளே இந்தக் கட்டுரை வரைவதனால் எனக்குக் கிடைக்கப் போகும் திட்டுக்களை நான் அறிவேன். ஆயினும் இனியாவது தயவு செய்து எமது இனத்தின் ஒற்றுமையை வலியுறுத்துங்கள்.

ஒன்றாக இலங்கை நமது நாடு என்று எண்ணத்துடன் தமிழர்கள் நிம்மதியாக, கெளரவத்துடன் வாழ வழிசெய்யும் கோரிக்கைகளை ஒன்றாக முன்வைக்கச் சொல்லுங்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெற்றியோடு அனைத்து தமிழ் அமைப்புக்களும் அவர்களுடன் இணைந்து தமிழர்களின் கோரிக்கைகளுக்காகப் போராட உங்களால் முடிந்த அழுத்தங்களைக் கொடுங்கள்.

வாழ விடுங்கள்.. இல்லையானால் விலகி விடுங்கள்
ஊர்க்குருவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக