செவ்வாய், 23 மார்ச், 2010

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான வேட்பாளர்கள் நெடுங்கேணிக்கு விஜயம்..!

வன்னியில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், வ.திருவருட்செல்வன் (மூர்த்தி) மற்றும் புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இன்றுமுற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி, ஆனந்தப்புளியங்குளம், ஒலுமடு, சின்னப் பூவரசன்குளம், மதியாமடு போன்ற பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது கட்சியின் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், இப்பணிகளை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மக்கள் ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து நெடுங்கேணி நகரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றது. இங்கு புளொட் தலைவர். த.சித்தார்த்தன், புளொட் வன்னி அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்), முன்னார் எம்.பி வை.பாலச்சந்திரன், வ.திருவருட்செல்வன், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் உரையாற்றினர். இதன்போது உரையாற்றிய புளொட் தலைவர் உள்ளிட்ட வேட்பாளர்கள், இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருக்கும் நிலையில் இப்பகுதிகளில் உள்ள மக்கள் யாவருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரியான தேவைகளும், பிரச்சினைகளும், கஸ்ரங்களுமே காணப்படுகின்றன. இம்மக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவற்றை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்தும் இம்மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம். இங்குள்ள மக்கள் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அத்தியாவசிய உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே அதற்குத் தேவையான உதவிகளை வழங்கவும், திறக்காமலிக்கும் பல பாடசாலைகளையும் திறந்து கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுப்போம். தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர் போராளிகளை பெற்றுத்தருமாறு பெற்றோர் எம்மிடம் விடுத்திருக்கும் வேண்டுகோள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அவர்களை விடுவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். எனினும் இன்னும் பலர் சிறுவர் போராளிகள் தடுத்து வைக்கபட்டுள்ளனர். அவர்களை விடுவித்து பெற்றோரிடம் சேர்ப்பிக்க மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவோம். எனவே எமது கட்சி மேற்கொண்டுவரும் சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர்களுக்கு மக்கள் தமது பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக