ஞாயிறு, 3 ஜனவரி, 2010
இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தோழர் சுந்தரம்!!! - R.Rahavan.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், விடுதலை அமைப்புக்களுக்கிடையேயான கருத்து முரண்பாடுகளுக்கும், ஆளுமைப்போட்டிக்கும் சகோதரப் படுகொலைகளே தீர்வு‘ என இனத்தின் அழிவு யுத்தத்திற்கு முதல் அத்திவாரமிட்ட நாள் 02.01.1982. ஆம்! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும், அதன் முதல் படைத்தளபதியும், "புதியபாதை" ஆசிரியருமான சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(தோழர் சுந்தரம்) புலிகளின் தலைவர்(பின்னாள்) பிரபாகரனால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்டு இன்று 28 வருடங்கள். 70க்களின் முற்கூறுகளில் சிங்களப் பெருந்தேசியவாதம் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிட்ட இன ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தோழர் சுந்தரம் "ஆற்றல்மிகு கரங்களிலே ஆயுதமேந்துவதே மாற்றத்திற்கான வழி, மாற்றுவழி ஏதுமில்லை"என கண்டார். விடுதலைப் போராட்ட வரலாறுகளைத் தேடித்திரிந்து கற்றார். அன்றிருந்த பொதுவுடமை தலைவர்களிடம் பழகி, பொதுவுடமை கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டார்.தமிழீழ விடுதலையை வேண்டிநின்ற தோழர் சுந்தரம், "தனிமனித பயங்கரவாதமும், வெறும் வீரதீர சம்பவங்களும் அடக்கியொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலையைப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, போராட்டமானது முழு மக்களையும் இணைத்த்தாக, எதிரிகளை சரியாக இனங்கண்டு நட்பு சக்திகளுடன் கைகோர்த்து முன்னெடுக்கப்பட வேண்டியது. தமிழீழ விடுதலையென்பது வெறும் மண் மீட்பு அல்ல. அது, எமது மக்களின் சமூக-பொருளாதார விடுதலையையும் குறித்ததானது" என்ற கருத்தியல் அடிப்படையில் கழகத்தை வளர்த்த தோழர்களில் தோழர் சுந்தரம் முதன்மையானவர்!தொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒருசேர்ந்த மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம்.கருத்து முரண்பாடுகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் பிளவுண்டு கலைந்தபோதும் தமிழ் மக்களின் உண்மையான விடுதலையை வேண்டி முற்போக்கு சிந்தனை கொண்ட போராளிகளுடன் இணைந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை நிறுவி அதன் படைத் தளபதியாகவும், அதேவேளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஏடான "புதியபாதை"யின் ஆசிரியராகவும் இறுதிவரை உழைத்தார். புதியபாதையில் அன்று அவர் தவறுகின்ற தமிழ் தலைமைகளையும், பிற்போக்குவாத சக்திகளையும் தயவுதாட்சண்யமின்றி விமர்சனத்திற்குள்ளாக்கினார். மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தினார். அதேவேளை "புளொட்"டின் படைத்தளபதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலாக ஆனைக்கோட்டை பொலீஸ் நிலையத்தை முற்றாக தாக்கியழித்து வரலாறு படைத்தார். ஒரு தொலைநோக்குள்ள பத்திரிகையாசிரியராகவும், சிறந்த படைத்தளபதியாகவும், மனித நேயமிக்க போராளியாகவும், பல்வேறு பரிமாணங்களை கொண்ட தோழர் சுந்தரம் மரணம்வரை மக்களின் வாழ்வை நேசித்தார்.02.01.1982அன்று "புதியபாதை" பணி தொடர்பாக யாழ்.சித்திரா அச்சகத்தில் முகாமையாளருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, பாசிஸ்ட் பிரபாகரனால் கோழைத்தனமாக மறைந்திருந்து தோழர் சுந்தரம் படுகொலை செய்யப்பட்டார்."புதியபாதை" அச்சிட்ட அதே சித்திரா அச்சகத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுவரலாற்றுக்கான முதல் எழுத்து; எழுதப்பட்டதென்பதை தவிர வேறு என்ன சொல்ல...?"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மறுபடியும் தர்ம்ம் வெல்லுமெனும் மருமத்தை நம்மால் உலகம் கற்கும்." எங்கள் பெருமதிப்பிற்குரிய தோழனே! வரலாறு உன் வாழ்வை மீட்டுத்தரும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக