திங்கள், 4 ஜனவரி, 2010

எம்.பிமார் ஐவருக்கு அழைப்பில்லை.. தேர்தல் தொடர்பான முடிவையெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்கிறது..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன முடிவை எடுப்பது என்பது குறித்து ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்றும் நாளையும் முற்பகல் 10மணிமுதல் நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் கூடி ஆராயவுள்ளது. எனினும், இவ்விடயத்தையொட்டி உடனடி முடிவு ஏதும் இக்கூட்டத்தில் எடுக்கப்படாமல் அந்தப் பொறுப்பைத் தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் தலைவர்களிடம் ஒப்படைக்கும் தீர்மானம் எட்டப்படலாம் என விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து அறியவந்தது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இன்றைய கூட்டம் பற்றிய அறிவித்தல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன எனக் கூறப்பட்டுள்ளது. ஜெயானந்தமூர்த்தி எம்.பி. வெளிநாட்டில் உள்ளார். கனகரட்ணம் எம்.பி. தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார். சிவநாதன் கிஷோர், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும் இக்கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு கூடியபோதும் இந்த ஐவரும் அழைக்கப்படவில்லை என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீகாந்தாவும், சிவாஜிலிங்கமும் அவர்கள் சார்ந்த ரெலோ கட்சியிலிருந்து விலகிவிட்டனர் என அக்கட்சித் தலைமையே தெரிவித்துள்ள நிலையில் அவர்களை அழைக்க வேண்டிய கேள்வி எழவில்லை எனக் கூட்டமைப்பின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளர்களுடனும் தாம் நடத்திய பேச்சுகளின் விவரத்தை நாடாளுமன்றக் குழுத்தவைர் இரா.சம்பந்தன் இன்றைய கூட்டத்தில் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் எனக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ள தீர்மானமும் இன்றைய கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்படும் என எதிர்வு கூறப்படுகின்றது. இதேசமயம், இந்த விவகாரங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டாலும் கூட, ஜனாதிபதித் தேர்தலையொட்டி என்ன தீர்மானம் எடுப்பது என்ற பொறுப்பு பெரும்பாலும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தவைர்களிடம் ஒப்படைக்கப்படும் விதத்தில் அங்கு முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக