வெள்ளி, 8 ஜனவரி, 2010
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான இரவுநேர இ.போ.ச பஸ்சேவை இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது..!!
ஏ9 வீதி 24 மணித்தியாலமும் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்கப்பட்டுள்ளதையடுத்து, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான இரவுநேர இ.போ.ச பஸ்சேவை இன்னும் ஓரிரு தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடபிராந்திய இ.போ.சபொதுமுகாமையாளர் எஸ்.கணேசபிள்ளை தெரிவித்துள்ளார். வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலிருந்து ஏ9 வீதியூடாக இராணுவ வழித்துணையின்றி சாதாரண பஸ்சேவைகள் நேற்றுமுதல் ஆரம்பாகியுள்ளன. இதுநாள் வரையில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா, மன்னார், கண்டி, திருமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை நோக்கிப் புறப்பட்ட பஸ்வண்டிகள் ஏ9 வீதியில் இராணுவ வழித்துணையுடன், வாகனத் தொடரணியாகவே நடைபெற்று வந்தன. இதேபோன்று வவுனியாவில், மன்னார், கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபட்ட பஸ் வண்டிகளுக்கு ஏ9வீதியில் இராணுவ வழித்துணையுடன் கூடிய வாகனத் தொடரணியுடனேயே நடைபெற்று வந்தன. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ்கள் வவுனியா தேக்கவத்தையிலிருந்து இராணுவத்தினரின் அனுமதி பெற்றபின்பே பயணிகள் பிரயாணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த நடைமுறையும் இப்போது மாற்றப்பட்டுள்ளது. வியாழன் முதல் இந்நடைமுறை மாற்றப்பட்டு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பஸ்நிலையங்களில் இருந்து பஸ்வண்டிகள் இ.போ.ச நேர அட்டவணைக்கமைய சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த பஸ் நிலையங்களில் இருந்து அரைமணித்தியாலத்திற்கு ஒரு தடவை பஸ்களில் பயணிகள் ஏறியதும் புறப்படத் தொடங்கியுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக