திங்கள், 4 ஜனவரி, 2010

ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பாரதூரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும் -மனோ எம்.பி..!!

ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பது என்பது தமிழர்களைப் பொறுத்தளவில் பாரதூரமான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரித்ததனாலேயே மாபெரும் அவலநிலையை தமிழினம் சந்தித்திருக்கின்றது. எனவே சிந்தித்து வாக்களிப்பதே சரியான முடிவாக இருக்கும். அதுவே தமிழருக்கு விடிவாக இருக்கும் என்பது திண்ணம் என்று இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், நான் சென்றமுறை யாழ்ப்பாணம் வந்தபோது இதே மண்டபவாசலில் காணாமற்போன ஒருவரின் தாய் என் கைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டு கண்ணீர்விட்டார். அந்தக் கண்ணீர் என் நெஞ்சில் இன்னமும் உறைந்துபோய் இருக்கின்றது. இத்தகைய கண்ணீர்க் கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நமக்குள்ள ஒரேதெரிவு சரத் பொன்சேகாதான். மஹிந்த ராஜபக்ஷ அணியில் பேரினவாதக் கருத்துக்களைக் கக்கும் விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் முக்கியநபர்களாக இருக்கின்றார்கள். இத்தகைய இனவாதிகளைத் தன்னுடன் வைத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ எப்படிச் சிறுபான்மை மக்களுக்கு நீதியான தீர்வைத் தருவார்? எப்படித் தரமுடியும்? நாட்டிலே இருக்கும் சர்வாதிகார ஆட்சியை அகற்ற இதுதான் சரியான சந்தர்ப்பம். அவ்வாறான ஆட்சி மாற்றத்தை உண்டாக்க வேண்டுமென்ற எண்ணந்தான் யாழ்.மக்கள் மத்தியிலே இருக்கின்றது என்பதை இங்கு பெருந்திரளாகக் கூடியுள்ள மக்கள் கூட்டமே நிரூபித்துள்ளது. இவ்வாறான மாற்றத்தை வேண்டுகின்ற எண்ணம் இங்குமட்டுமல்ல, இலங்கை முழுவதிலும் தோற்றம் பெற்று, எழுச்சி கொண்டு வருவதால் சரத்பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுவது உறுதியாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக