செவ்வாய், 19 ஜனவரி, 2010

தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்ததும் முட்டாள்தனமான வன்னித் தலைமையால் வீணான அழிவுகளையே சந்தித்தோம் - விநாயகர்த்தி முரளிதரன்.

கடந்த காலங்களில் துப்பாக்கி வேட்டுக்கள் மீது நம்பிக்கை வைத்து செயற்பட்ட நாங்கள் தற்போது மக்களின் வாக்குகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று தேச நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நான் நாட்டில் இல்லாத போது நடைபெற்ற தேர்தல்களில் ஏமாளிகளையும் கோமாளிகளையும் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்த நிலை இனிமேல் இடம்பெறாமல் சிறந்த கல்வியறிவுடைய சமூக சிந்தனையுடையவர்களையே எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கான சூழ்நிலையினை நான் உருவாக்குவேன் என்றும் கூறினார்.
மட்டக்களப்பு களுவன்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் கருணா அம்மான் இங்கு தொடர்ந்து பேசுகையில், என்னை அமைச்சர் என்றோ முரளிதரன் என்றோ அழைக்கத் தேவையில்லை. வழமை போன்று கருணா அம்மான் என்று தமிழ் மக்கள் உரிமையோடு அழைக்க முடியும். கடந்த காலத்தில் இடம்பெற்ற போராட்டம் அர்த்தமற்றதாக மாறியதையடுத்து நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பினோம். அது இலக்கை அடைய முடியாத போராட்டமாகவே தொடர்ந்தது.
அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள் இளைஞர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு மறைந்திருந்தார்கள். அக்கால கட்டத்தில் ஒரு மாவீரர் தினத்தில் பத்தாயிரம் போராளிகள் சமாதியாகிவிட்டார்கள். எனவே விடக் கூடாது எனச் சபதம் செய்து தொடர்ந்தும் போராடினோம். அடுத்த மாவீரர் தினத்தில் பதின் மூவாயிரம் போராளிகள் மடிந்து விட்டார்கள். அதனால் விடக்கூடாது என உறுதியெடுத்துக் கொண்டு தொடர்ந்து போராடினோம். அதற்கடுத்த மாவீரர் தினத்தில் பதினேழாயிரம் போராளிகள் வீரச் சாவடைந்து விட்டார்கள். எனவே விடக் கூடாது. போராட்டத்தைத் தொடருவோம் என்று தொடர்ந்தும் முடிவில்லாத போராட்டம் இடம்பெற்றதனால் எமது மக்கள் வீணான அழிவுகளையே சந்தித்தார்கள். கிழக்கு மக்களை இந்த அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே போராட்டத்தை தூக்கி வீசி எறிந்துவிட்டு ஜனநாயக பாதைக்குத் திரும்பினோம்.
பேச்சுவார்த்தை மூலமாக சாதாரணமானதொரு தீர்வை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால், அதற்கு முட்டாள்தனமான வன்னித் தலைமை அடம்பிடித்துச் செயற்பட்டது. தற்போது தமிழர் கூட்டமைப்பு என்ற கட்சியின் முந்திய உருவம் தான் தமிழ் மக்களை தனித்துவம் என்றும் உரிமையென்றும் கோஷமெழுப்பி தவறாக வழி நடத்தியது. இப்போதும் அவர்கள் அந்தக் கொள்கையினை கைவிடாமல் நமது சமூகத்தை பிழையான வழிக்குக் கொண்டு செல்ல முற்படுகிறார்கள். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தற்போதைய சூழ்நிலையில் நாங்கள் தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டு எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தமிழர்களுக்கு பெரும் அந்தஸ்து கிடைத்துள்ளது. எதிர் வரும் பொதுத் தேர்தல் ஏனைய தேர்தல்களிலும் ஆளும் கட்சியில் அங்கத்தவர்களை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
மாறாக சிறிய சிறிய கட்சிகளில் நாம் சேர்ந்திருக்கக்கூடாது. ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் போன்ற சிறிய கட்சிகளை தென் பகுதி மக்கள் அரசியல் கட்சிகளாக நோக்குவதில்லை. போராட்டக் குழுக்களாகவே பார்க்கிறார்கள்.
எனவே, கடந்த முப்பது வருட கால போரை முடித்து நாட்டில் நிம்மதியையும் அமைதியையும் ஏற்படுத்தித்தந்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்த சந்தர்ப்பம் வழங்குவதன் மூலமாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக