ஞாயிறு, 3 ஜனவரி, 2010

பிரபாகரனையும், தமிழ்மக்களையும் தவறாக வழிநடத்தி அழிவுப்பாதைக்குக் கூட்டிச் சென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே -கிழக்கு முதல்வர்..!!

புலிகளின் தலைவர் பிரபாகரனையும், தமிழ்மக்களையும் தவறாக வழிநடத்தி அழிவுப்பாதைக்குக் கூட்டிச்சென்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே என்று தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்குமாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் களுவாஞ்சிக்குடிக்கான டிப்போ நிர்வாகக் கட்டடத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வைபவத்துக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிழக்கு மாகாண முகாமையாளர் ஏ.எம்.நசீர் தலைமை வகித்தார். இக்கட்டடத்தை போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார். இவ்வைபவத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், களுவாஞ்சிக்குடிப் பிரதேசசபை தவிசாளர் சிவகுணம், போரதீவுப் பிரதேசசபை தவிசாளர் ஸ்ரீதரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.சுபைர் மற்றும் பி.பிரசாந்தன் உட்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன், தமிழ் மக்களின் அழிவுக்கெல்லாம் பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆகும். பிரபாகரன் விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் அவரை தவறான பாதைக்கு இட்டுச் சென்றவர்களும் இந்தக் கூட்டமைப்பினரே ஆவர். தமிழர்கள் சுயமாகச் சிந்தித்து செயற்பட முடியாத அளவுக்கு பிரபாகரன் எடுத்த முடிவுகளுக்கு இவர்களே பிரதான காரணமாக உள்ளனர். தமிழ்மக்களின் நலன்களை எண்ணிப் பார்க்காதவர்களின் பின்னால் கிழக்கு மாகாண மக்கள் ஒருபோதும் நிற்கவே மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக