ஞாயிறு, 3 ஜனவரி, 2010
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இத்தருணத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் -ரவூப் ஹக்கீம் எம்.பி..!!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இத்தருணத்தில் சரியான முடிவை எடுத்து தமிழ்மக்களைப் பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணம் வந்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நேற்றுமாலை வீரசிங்கப் மண்டபத்தில் பொன்சேகாவுக்கு ஆதரவுதெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ரவூப்ஹக்கீம் மேலும் கூறியதாவது, வடக்கு, கிழக்கில் நடைபெற்ற போராட்டத்தைப் பயங்கரவாதம் எனக்கூறி அடக்கிய அரசு, இன்று அரச பயங்கரவாதத்தை மக்கள்மீது திணித்து வருகின்றது. இந்நிலையில் கொச்சைப்படுத்தப்படாத நீதியான, நேர்மையான அரசியலை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது சாதகமான சமிக்கையைக் காட்டிவருகின்றது. ஆறு தசாப்தங்களாகப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழினம் மூன்று தசாப்தங்களாக ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தது. ஆனால் தற்போது அது பின்னடைவைச் சந்தித்துள்ளது. இருந்தபோதும் தற்போது புதிய போராட்டம் ஒன்றை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியினரான நாம் இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கலந்துரையாடி வருகின்றோம். இது வித்தியாசமான ஏற்பாட்டுடன் நடைபெற்றுவரும் தேர்தலாகும். எனவே, தான் நாமும் வித்தியாசமான முறையில் எதிர்கொள்கின்றோம். தமிழ் மக்களாகிய நீங்களும் இத்தேர்தலில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். கடந்தமுறை போன்று தேர்தலை பகிஸ்கரித்து விடாதீர்கள்! இது எவ்வளவு ஆபத்தானது என்பதை புத்திஜிவிகள் பலரும் எடுத்துக் கூறிவருகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்புணர்வுகளைத் தூக்கி வைத்துவிட்டு, காலம்காலமாக, பரம்பரை பரம்பரையாக அரசாள முற்படும் ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்புங்கள். இன்று புதுப்பிரகாசத்துடன், ஆளுமையுடன் ஜனநாயக அரசியலுக்குத் தன்னை அர்ப்பணித்து வந்துள்ளார் பொன்சேகா. தெற்கு, வடக்கு, கிழக்கு என்று வாக்களித்த காலம் மாறி, சுயநிர்ணயம் வேண்டும் என்று வாக்களித்த காலம்மாறி, சுதந்திரத்துக்கு எந்தவிதமான அரசு எமக்கு வேண்டும் என்ற நிலைமாறும் காலகட்டத்தில் நன்கு சிந்தித்து புத்திஜீவிகளாக இருக்கும் தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக