ஞாயிறு, 17 ஜனவரி, 2010
வட்டுக்கோட்டை (தமிழீழ?) தீர்மானத்தை முன்வைத்து ஐரோப்பிய நாடுகளில் தேர்தலும் இலங்கைத் தூதுவராலயங்களின் நடவடிக்கைகளும்.. (சுவிஸில் நடப்பதென்ன?)
வட்டுக்கோட்டை தீர்மானம் என்னும் தமிழீழத் தீர்மானத்துக்கான கோரிக்கையினை முன்வைத்து எதிர்வரும் 23ம் மற்றும் 24ம் திகதிகளில் சுவிஸ்லாந்தின் சகல மாநிலங்களிலும் தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும், அதேபோன்று ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் குறித்த தேர்தல் நடத்தப்படவிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதேவேளை மேற்படி தேர்தலில் கலந்து கொள்வோர் தேர்தலுக்கான பங்களிப்புக்களைச் செய்வோர் மற்றும் வாக்களிக்கச் செல்வோர் உள்ளிட்ட அனைவரையும் வீடியோ ஒளிப்பதிவு செய்யவும், புகைப்படம் எடுக்கவும் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதுவராலயங்களின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிரடிக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து அதிரடி இணையத்துடன் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் சுவிஸ்லாந்திலுள்ள மாற்றுத்தமிழ் அமைப்பொன்றின் முக்கியஸ்தரிடம் வினவிய போது, இவ்விடயம் தொடர்பில் தாமும் அறிந்துள்ளதாகவும், தம்மிடமும் இதுகுறித்து சிலர் கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மேலும் தகவல் தருகையில், குறித்த வாக்கெடுப்பு குறித்த எந்த விடயத்திலும் தலையிடவோ அதுகுறித்து அலட்டிக் கொள்ளவோ நாம் விரும்பவில்லை. ஏனெனில் இலங்கையில் புலிகள் ஒழிக்கப்பட்டதும் புலிகளின் போராட்டமும் ஓய்ந்து விட்டது. வெளிநாடுகளில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால் அங்கு எந்த நன்மையும் எமது மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்தை தவறாக வழிநடத்திய இவர்கள் தமது இருப்பினை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் தமிழீழம் என்ற மாயைக்குள் இருந்து வெளியேவர முடியாத மனநிலையைக் கொண்டும் இருக்கின்றனர். இவர்களால் மக்களுக்காக எதனையுமே செய்ய முடியாது. எம்மைப் பொறுத்த மட்டில் அந்த மக்களுக்காக ஏதாவது நல்லதைச் செய்ய விரும்புகிறோமேயொழிய இதுபோன்று அர்த்தமற்ற அடைய முடியாத மாயைக்குள் உள்ளோர் பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் போவதில்லை. இனிவரும் காலங்களிலும் புலிகளின் பெயரால் செய்யப்படும் இவ்வாறான வேலைகளைப் பற்றி கதைத்து மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.இதேவேளை பிறிதொரு தகவலின்படி கடந்த தைமாதம் ஜெனீவாவில் புலிகளால் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் கடந்தமாத இறுதியில் விடுமுறைக்காக இலங்கை சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரகசியப் பொலீசாரினால் “சுவிஸில் புலிகளின் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் என்பற்றில் புலிக்கொடியுடன் முன்னின்று இலங்கை அரசுக்கெதிராக செயற்பட்டதாக” குற்றம் சாட்டி விசாரணைக்காக கைது செய்யப்பட்டு பின்னர் அவர் சுவீஸிலுள்ள மாற்றுத் தமிழ்க்கட்சி அமைப்பொன்றின் முக்கியஸ்தரின் வேண்டுகோளுக்கிணங்க விசாரணையின் முடிவில் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதாக தெரிய வந்தது.இதுகுறித்தும் எமது இணையம் குறித்த தமிழ் அமைப்பின் முக்கியஸ்தரிடம் வினவிய போது, அந்த சம்பவம் உண்மையே. ஆயினும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர் புலி உறுப்பினரோ அன்றில் புலி ஆதரவாளரோ அல்ல. வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது மக்கள் கொல்லப்படுவதை கருத்திற் கொண்டே அவர் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் எமது நல்லநண்பர் என்ற ரீதியிலும் அவர் புலிகளின் வன்முறைகளுக்கோ பாசிசத்துக்கோ துணைபோகக் கூடியவரோ அல்லவென்ற ரீதியிலும் அவருக்கான உத்தரவாதத்தை வழங்கி அவரின் விடுதலைக்கான எமது கூடுதல் பங்களிப்பினை செலுத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக