சனி, 9 ஜனவரி, 2010

ஜே.வி.பி. கட்சியின் மாணவர் ஒன்றியம் ஜனாதிபதிக்கு ஆதரவு..!!

எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமை தொடர்பில் ஜே.வி.பி கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஜே.வி.பி. கட்சியின் மாணவர் ஒன்றியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் நாடு பிளவுபடக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயர் பாதுகாப்பு வலங்களை அகற்றுவதாகவும், வடக்கு கிழக்கை மீள இணைப்பதாகவும் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குறுதி அளித்துள்ளதாக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களை விடுதலை செய்வதாக வழங்கப்பட்ட வாக்குறுமதி மிகவும் பாரதூரமானதெனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி. கட்சி கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு சக்திகளுக்கு எதிராக போராடி வந்துள்ளதாகவும், திடீரென குறுகிய அரசியல் லாபங்களுக்காக கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது எனவும் உந்துல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
எமது கட்சி சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்த போதிலும், நாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உந்துல் பிரேமரட்ன குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இவையாவும் அரசாங்கத்தின் திட்டமிட்ட பரப்புரை எனவும் இதில் உண்மை எதுவும் இல்லை எனவும் ஜே.வீ.பீ தரப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக