புதன், 20 ஜனவரி, 2010

தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு முழுமையான ஆதரவைத் தென்னிலங்கையிலிருந்து வழங்குவோம் -கலாநிதி விக்கிரமபாகு

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இன்று நசுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்களின் விடுதலைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தென்னிலங்கையிலிருந்து வழங்குவோம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தைப் பொதுச்சந்தைக்கு முன்பாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவ் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதான பெருந்தேசியவாதக் கட்சிகளின் இரு வேட்பாளர்களும் தாம் பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுள்ளதாகக் கூறிவருகின்றனர். அப்படியாயின் இவர்களுக்கு ஏன் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் பிரிவினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். தற்போது பயங்கரவாதிகள் இல்லை என்றால் என்னைப்போல் வீதியில் நின்று மக்களுடன் தொடர்புகொள்ள இவர்களால் ஏன் முடியாமல் இருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்த இம்முறை பாராளுமன்றத்தை ஓரங்கட்டி நினைத்தவுடன் ஒப்பந்தங்களைச் செய்ய இந்த முறைமை தேவைப்பட்டது. அரசாங்கத்துக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறும்போது அடக்குவது இலகுவாகும். எனவே, நிறைவேற்று அதிகார முறைமையானது எதிர்ப்பாளர்களை அடக்கச் சிறந்த கருவியாகும். இவை இல்லாமல் செய்யவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறியது. ஆனால், பதவிக்கு வந்தவுடன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. பேசுவதற்கு ரணில் தயார் என்று ஒரு கடிதத்தை எமக்கு வழங்கினால் நாம் ஆதரிக்க முடியும் எனத் தமிழ்ச்செல்வன் அன்று எம்மிடம் கூறினார். இவ்வேளையில் 20 பாராளுமன்ற உறுப்பினர் அங்கு இருந்தனர். நான் இந்தச் செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடத்துக்கு உரியமுறையில் அறிவித்தேன். அவர்கள் சாதகமான பதிலை வழங்கவில்லை. இன்று தமிழர் தாயகத்தை மூன்றாகக் கூறுபோடுவதற்கு இரா.சம்பந்தன் இணங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் நசுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், 60ஆண்டு காலமாக நடைபெற்றுவரும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஒருபோதும் சரணாகதிக்குள் செல்லாது. இப்போராட்டத்தைத் தென்னிலங்கை இடதுசாரிகள், மலையக மக்கள், முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்புடன் முன்னெடுத்துச் செல்வோம். இந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு எதிராகச் சேறுபூசப்படுகிறது. என்னை ஆதரிக்கும் மக்களுக்கு எனது செயற்பாடுகள் நன்றாகத் தெரியும். எனவே, இந்தத் தேர்தலில் என்னை ஆதரியுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக