செவ்வாய், 5 ஜனவரி, 2010

உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீ உயரத்தில் ஜொலிக்கும் ‘புர்ஜ் கலிஃபா’ ..!!

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் துபாய் கோலாகல கொண்டாட்டங்களுடன் திறக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கட்டிடத்தை மன்னர் ஷேக் முகமது நேற்று திறந்து வைத்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் டிவியிலும், இண்டர்நெட்டிலும் கண்டு வியந்து ரசித்த இந்த கட்டிடத்தின் உயரம் 828 மீட்டர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2716.5 அடி. மேலும் இக்கட்டிடம் இனி ‘புர்ஜ் கலிஃபா’ என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு இரவு விருந்தில் ‘எம்மார்’ தலைவர் முஹம்மது அல் அப்பாரிடம் கனடா நாட்டை சேர்ந்த குழுவினர் ஒரு திட்டம் குறித்த கோரிக்கையை முன்வைத்தனர். இதை மன்னர் ஷேக் முஹம்மதுவிடம் அல் அப்பார் சொன்னதும் உடனடியாக அனுமதி கிடைத்தது. இதைத்தொடர்ந்து சுமார் 200 ஹெக்டேர் பாலைவன நிலப்பரப்பில், வணிகக்கடல் மாநகர் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டத்தில் அடங்கியதே புர்ஜ் துபை. இந்த வணிகக்கடல் மாநகரின் நடுவில் அமைந்துள்ள புர்ஜ் துபையின் கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 21, 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. 43 மீட்டர் நீளம் கொண்ட 192 கான்கிரீட் தூண்கள் ஒவ்வொன்றின் மேல் தான் இந்த கட்டிடம் நிற்கிறது. அடித்தரை 12500 கனமீட்டர் கட்டிட தளத்துடன், 3 மீட்டர் தடிப்புடன் உள்ளது. கடலுக்கு அருகில் இருப்பதால் கான்கிரீட் இரும்புகள் துருப்பிடிக்காத வகையில் பிரத்தியேமாக அமைக்கப்பட்டுள்ளன. காற்று அழுத்தம், ஈர்ப்பு விசை மற்றும் பூமி அதிர்வு இவைகளை தாங்கக் கூடிய சக்தி கொண்டதாகவும், உலகின் ஆற்றல் மிக்க கட்டிட நிபுணர்களால் கவனத்துடன் கையாளப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 57 லிஃப்ட்களும், 8 எஸ்கலேட்டர் படிகளும் உள்ளன. இதில் இரண்டு லிஃப்ட்கள் இரண்டடுக்கு கொண்டவை. இவையிரண்டும் தரை தளத்திலிருந்து 124வது மாடி வரை மட்டுமே செல்லும். வண்ண விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ள லிஃப்ட்கள் 1 வினாடிக்கு 10 மீட்டர் உயரத்தை கடக்கும் ஆற்றல் கொண்டவை. மொத்தம் 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் குறைந்துகொண்டே செல்லும் என்பது மற்றொரு சிறப்பு. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடுகையில் உச்சி மாடியில் 10 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் குறைந்து குளிர் அதிகரிக்கும். மேலும், இதன் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு 158வது மாடியில் ஒரு மிக உயர்ந்த மசூதியும் உள்ளது. 900 ஸ்டுடியோக்கள், நூற்றுக்கணக்கான அப்பார்ட்மென்டுகள் மற்றும் இத்தாலிய ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ஹோட்டல்களும் உள்ளன. தற்போது 59 பில்லியனுக்கு மேல் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் துபாய் வேர்ல்டின் கிளை நிறுவனமான எம்மார் பிராப்பர்டீஸ் தான் இதை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக