வியாழன், 31 டிசம்பர், 2009
யாழ்.குடா, தீவகப் பகுதிகளில் ஊரடங்கு முற்றாக நீக்கம் - ஒலிபெருக்கி மூலம் ஈ. பி. டி. பி.
தீவகப் பகுதி உட்பட யாழ். குடாநாட்டில் அமுல்படுத்தப்பட்டு வந்த இரவு நேர ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி, பொன்னாலை, காரைநகர், மண்டைத் தீவு தடை முகாம்கள் மற்றும் சோதனைச் சாவடிகளும் நீக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் பணிப்புரையை அடுத்து இன்று முதல் இவை அனைத்தும் நீக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.தீவகம், அல்லைப்பிட்டி, காரைநகர், மண்டைத்தீவு போன்ற உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் சுதந்திரமாக சென்றுவரக் கூடியதாக இருக்கும். அத்துடன் தீவகப் பகுதிகளிலும் யாழ். குடாநாட்டிலும் மீனவர்களுக்காக அமுல்செய்யப்பட்டிருந்த பாஸ் நடைமுறையும் இன்று முதல் ரத்துச் செய்யப்படுகிறது.தீவகப் பகுதி உட்பட உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்திருந்தார். இப்பகுதி மக்கள் சுதந்திரமாக சென்றுவருவதற்காக மேற்படி சோதனைச் சாவடிகள், தடை முகாம்கள், வீதித் தடைகள் அகற்றுவது குறித்து ஆராய்ந்துள்ளார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மேற்படி விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.தேவேளை தீவகப் பகுதிகளுக்கு உட்புகும் அல்லைப்பிட்டி தடைமுகாமும், நேற்று மதியம் முதல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். குடாநாட்டிலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் தெரிவிக்கிறது.நயினாதீவு, நெடுந்தீவு போன்ற தீவகப் பகுதிகளுக்குச் செல்வோர் கட்டாயமாக அல்லைப்பிட்டியூடாகவே செல்லவேண்டும். வாகனத்தில் செல்வோர் வாகனத்தைவிட்டு இறங்கி அடையாள அட்டை பதிவு செய்தே செல்லவேண்டும். எனினும் நேற்று மதியம் முதல் இந்த நடவடிக்கை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. சாதாரண காவலரண் மட்டுமே இயங்கு கிறது. யாழ். குடாநாட்டடில் தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் சிலவேளைகளில் நள்ளிரவு 12.00 மணி முதல் 4.00 மணி வரையிலும் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்தது.ஆலய உற்சவங்கள், சிவராத்திரி, கிறிஸ்மஸ் போன்ற தினங்களில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டு நேர மாற்றங்கள் செய்யப்பட்டும் வந்தன.எனினும் நேற்று முதல் குடாநாட்டுக்கான ஊரடங்கு முற்றாக நீக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்பட்ட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய பகுதி மற்றும் மண்டைத்தீவு தடைமுகாம், மண்டைத்தீவு பகுதி மற்றும் காரைநகர் பகுதிக்கு இன்று முதல் மக்கள் சுதந்திரமாக சென்று வரமுடியும்.ஈழத்துச் சிதம்பரம் என்றழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் உற்சவம் தற்போது நடைபெற்று வருவதால் ஆலயப் பகுதியில் தடைமுகாம்கள், சோதனைச் சாவடிகள் மற்றும் ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து ஒலிபெருக்கி மூலம் ஈ. பி. டி. பி. நேற்று மக்களுக்கு அறிவித்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக