கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மீள் குடியமர்ந்துள்ள பகுதிகளில் தனியார் பஸ் சேவைக்கு அனுமதி வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிணங்க பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்கு அமைவாக சேவையை நடாத்த அனுமதி பெற்றோர் எதிர்வரும் புதன்கிழமை தமது சேவையை தொடரமுடியுமென வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். மினிபஸ் சேவையை நடாத்த விரும்பும் வாகன உரிமையாளர்கள் தத்தமது மாவட்ட செயலகத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாண அமைச்சின் போக்குவரத்துப் பிரிவினால் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அனுமதிகளை வழங்கவும் மாகாண சபை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சியில் போக்குவரத்துச் சபை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளபோதும் சேவையில் ஈடுபடுத்த போதிய பஸ் வண்டிகள் இன்மையால் தனியார் பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுபடுத்த அரசு முன்வந்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக