திங்கள், 21 டிசம்பர், 2009

வவுனியா பகுதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் புளொட் தீவிரம்..! (புகைப்படங்கள் இணைப்பு)

வவுனியாவில் தீவிரமடைந்துள்ள டெங்குநோயைப் பரப்பும் நுளம்புகளை ஒழிப்பதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நேற்றுமுதல் பாரிய சிரமதானப் பணியொன்று முன்னெடுக்கப் பட்டிருப்பதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஜி.ரீ.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13பேர் இதுவரையில் டெங்கு நோய்க்குப் பலியாகியிருப்பதாகவும், 600ற்கும் மேற்பட்டவர்கள் டெங்குநோய்க்கு ஆளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பகுதியினர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு செயற்பாடுகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நிலைமை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்படவில்லை என்பதாலேயே பொதுமக்களின் ஒத்துழைப்போடு, தமது கட்சி உறுப்பினர்களைப் பயன்படுத்தி வீடுகள் வளவுகளில் காணப்படுகின்ற டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைத் துப்பரவு செய்வதிலும், கழிவுப் பொருட்களை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து அகற்றுவதிலும் இந்த சிரமதானத்தின்மூலம் ஈடுபட்டிருப்பதாக ஜி.ரீ.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். நேற்றுக்காலை வைரவப்புளியங்குளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிரமதான பணியில் புளொட்டின் வன்னிப்பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட் அமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், நகரசபை உறுப்பினர்களாகிய எஸ்.குமாரசாமி, கே.பார்த்திபன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவிலானோர் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு இந்த சிரமதான பணியை முன்னெடுக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட புளொட் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக