புதன், 23 டிசம்பர், 2009

வவுனியா திருநாவற்குளத்தில் தொடரும் தெருச்சண்டியர்களின் அடாவடிகளை அடக்குவது யார்?, பொதுமக்கள் விசனம்..!!!

வவுனியா திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கையில் பரமலிங்கம் குகதாஸ் என்பவர் மதுபோதையில் நேற்றிரவு நடாத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதுடன், வாகனமொன்று சேதத்திற்குள்ளாகியதாகவும் தெரியவருகின்றது. இவர் அண்மையில்தான் வவுனியா செட்டிகுளம், ஆனந்தகுமாரசுவாமி நிவாரணக் கிராமத்திலிருந்து விடுதலையாகி வந்தவர் எனவும், நேற்றைய சம்பவத்தையடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து வவுனியா பொலீசாரும் அங்குள்ள தமிழ் அமைப்புக்களும் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறியவருகின்றது. இதுபற்றி நிருபர் தகவல் தருகையில், மேற்படி திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கைப் பகுதியானது தெருச் சண்டித்தனம் மற்றும் பிற்போக்குத் தனமான நடவடிக்கைகள் என்பவற்றுக்கு பெயர்போன இடமாக திகழ்ந்து வருவதாகவும், தலைமறைவாகியுள்ள நபர் உள்ளிட்ட சிலர் அவ்வீதியில் செல்லும் பெண்கள், பாடசாலைக்கு செல்லும் மாணவிகளிடம் சில்மிசம் செய்வது, கிண்டலடிப்பது, பொதுமக்களைத் தாக்குவது, பணம் பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து வவுனியா பொலீசாரோ அன்றில் அப்பிரதேசம் தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகக் கூறிக்கொள்ளும் புளொட் அமைப்பினரோ எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய பொறுப்பாளர் பவனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாம் இதுபற்றி கேள்வியுற்றுள்ள போதிலும், சட்டத்தை நாம் கையிலெடுக்க முடியாது. அதன் காரணத்தினால் பொலீசார் மற்றும் படைத்தரப்பினருக்கு இதுபற்றி அறிவித்துள்ளோம். இருந்தபோதிலும் உரிய நடவடிக்கைகள் இதுவரையில் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது. எதிர்காலத்தில் இவ்வாறான அடாவடித்தனங்கள் தொடரும் பட்சத்தில் நாம் இதில் தலையிட வேண்டிய நிலையேற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் நிருபரிடம் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், புலிகள் இருந்த காலகட்டத்தில் புளொட் அமைப்பினர் வவுனியாவில் இவ்வாறானவர்கள்மீது எந்தவொரு நடவடிக்கையினை மேற்கொண்டாலும் பொலீசார் கவனத்திற் கொள்ளாமலிருந்தனர். இதனால் இவ்வாறானவர்கள்மீது பொலீசார் மற்றும் இராணுவத்தினரின் பாணியில் புளொட் அமைப்பினர் நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இதன் காரணமாக இவ்வாறானவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் ஒருவித பயம் இருந்தது. தற்போது புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் யாருமே யாருக்கும் பயப்படாத நிலை காணப்படுவதோடு, புளொட் போன்ற தமிழ் அமைப்புகள் சட்டம் ஒழுங்கு என்பவற்றைக் கருத்திற்கொண்டு இவ்வாறானவர்கள்மீது எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக மேற்குறித்த தெருச்சண்டியர்கள் பொலீசாருக்கோ, எந்தவொரு தமிழ் அமைப்புக்குமோ பயப்படாத நிலையில் தமது அடாவடித்தனங்களை அறங்கேற்றி வருகின்ற சூழ்நிலையே காணப்படுகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக