வியாழன், 3 டிசம்பர், 2009

முகாம்களிலுள்ளோர் சுதந்திரமாக நடமாடலாமென கூறப்பட்ட போதிலும் வெளியில் செல்வோர் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், நடமாட்டம் கண்காணிக்கப்படும் !!

யுத்தத்தால் 6மாதங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே சென்று வருவதற்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் அதிகாரிகளிடம் அவர்கள் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் இதன்மூலம் அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களைவிட்டு வெளியேசென்று திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் செட்டிகுளம், புல்மோட்டை முகாம்களிலிருந்து நேற்றுக் காலை 8மணிக்கு வெளியே வந்தனர். செட்டிகுளம் முகாம்களிலிருந்து வெளியே வந்தவர்கள் அந்தப் பகுதியிலும் வவுனியாவிலுள்ள தமது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றனர். தூர இடங்களில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுவர விசேட பஸ்சேவைகள் நடத்தப்பட்டன. ஆனால், வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மாலை 4மணிக்கு முன் திரும்பிவர வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களிலுள்ள 1லட்சத்து 28 ஆயிரம் பேரும் அங்கிருந்து வெளியே சென்றுவர முடியுமென அரசு அறிவித்திருந்தது. நேற்று 5700பேர் பஸ்களில் ஏறி வெளியேறிச் சென்றனர். முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்தவர்கள் வெளியே வருவதற்கான முதற்கட்ட நடவடிக்கை என்று ஐக்கிய நாடுகள் சபை நேற்று குறிப்பிட்டிருந்தது. விடுவிக்கப்படுபவர்களுக்கு இருவிதமான நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டது. குடும்பங்களுடன் இருப்பவர்கள் தமது பிறந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப் படவிருப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் கிரமமாக பொலிஸில் பதிவுசெய்ய வேண்டும். மற்றைய வகையான குழுவினர் குறிப்பிட்டகால வரையறைக்குள் முகாம்களுக்குத் திரும்பிவிட வேண்டும். இதனை முன்னெச்சரிக்கையான உணர்வுடன் ஐ.நா.வரவேற்றுள்ளது. இதனை விடுதலைக்கான ஒரு வழிமுறையாக நாம் பார்க்கிறோம். இது சிறப்பானது அல்ல. ஆனால் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டிருந்த மக்கள் வெளியே வருவதற்கான முதற்படியாக இது உள்ளது என்று கொழும்பிலுள்ள ஐ.நா.வின் பேச்சாளர் கோர்டன் வைஸ் த கார்டியன் பத்திரிகைக்கு நேற்று தெரிவித்துள்ளார். ஜனவரி 31ற்கு முன்னர் இடம்பெயர்ந்த சகலரையும் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதென அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் அதனை அரசுசெய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம் என்று கோர்டன் வைஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக